மைசூரு,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவு கேட்டு அவரது அண்ணன் கண்ணீர் சிந்தினார்.
ஜெயலலிதாவின் அப்பாவின் முதல் மனைவியின் மகன் வாசுதேவன். இவருக்கு தற்போது 82 வயதாகிறது. மைசூரில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் அம்மாவான சந்தியா வாசுதேவனின் சித்தியாகும். அதாவது வாசுதேவனின் அப்பாவின் இரண்டாவது மனைவி. அவரது மகள்தான் ஜெயலலிதா.
கர்நாடகாவின் மைசூரு மாவட்டம் டி.நரசிபுரா தாலுகாவில் உள்ள ரங்கராஜபுரா கிராமத்தில் வசிக்கும் ஜெயலலிதாவின் சகோதரர் வாசுதேவன், ஜெயலலிதா மறைந்த தகவலைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதார்.
இது தொடர்பாக வாசுதேவன் கூறியதாவது:
ஜெயலலிதா பற்றி பேச வார்த்தைகள் இல்லை. எனது தந்தையின் இரண்டாவது மனைவியின் மகளாக இருந்தாலும் நான் அவரை சொந்த தங்கையாகவே நினைத்தேன்.
எப்பொழுதும் அவர் நலத்திற்காகவே வேண்டினேன். மனைவி மற்றும் மகனின் மரணத்தை பார்த்து வேதனையில் வாழ்ந்து வருகிறேன். தற்போது தங்கையும் இறந்துவிட்டார் என்ற செய்தி வருத்தத்தை தந்துள்ளது.
தனது சொந்த திறமையால் திரைப்படம் மற்றும் அரசியல் துறையில் ஜெயலலிதா சாதித்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்காக தன்னை தியாகம் செய்தவர். அவரது பணிகள் என்றும் தமிழ் மக்களின் உள்ளத்தில் நீங்காது நிற்கும்.
அவரது மறைவு தமிழ்நாட்டுக்கு மட்டும் சோகத்தை அளிக்கவில்லை. கர்நாடக மாநிலத்தில் உள்ள அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை தந்துள்ளது.
தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த வலியை தாங்கிக் கொள்ளும் சக்தியை சாமுண்டீஸ்வரி தேவி வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் என்றார்.