சென்னை:
அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவ சிலையில், அவரது முகம் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜெ சிலை குறித்து வரும் தகவல்கள் தனக்கு வேதனையை தருகிறது என்றும், ஜெயலலிதா சிலையை தனது சொந்த செலவில் சீரமைப்பு கொடுக்க இருப்பதாக சிலையை வடிவமைத்த சிற்பி, பி.எஸ். வி.பிரசாத் கூறி உள்ளார்.
ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளையொட்டி, அவரது முழுஉருவ சிலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த சிலை சரியாக வடிவமைக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு வகையான கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஒருசிலர், சிலையில் உள்ள ஜெ.வின் முகம் வளர்மதி முகம்போல் இருப்பதாகவும், டிடிவி தினகரனின் தங்கத்தமிழ்செல்வன் காந்திமதி முகம் போல உள்ளதாகவும் தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஜெ. சிலைக்கு கீழே, இவர்தான் ஜெயலிதா என்று போர்டு வையுங்கள் என்றும் கலாந்துள்ளார்.
இந்நிலையில், ஜெ.சிலை மறு சீரமைக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ள நிலையில், சிலையை வடிவமைத்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி, சர்ச்சை காரணமாக மிகவும் மனவேதனை அடைந்துள்ளதாக கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது,
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிலை வடிவமைக்க கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் தனது ஆர்டர் கிடைத்தாகவும், குறுகிய காலத்தில், இரவும் பகலும் பாடுபட்டு சிலை வடிமைக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.
ஜெயலலிதா சிலையை உருவாக்க நானும், எனது சகோதரன் காமதேனு பிரசாத்தும் மற்றும் 20 ஊழியர்களும் அரும்பாடு பட்டோம். குறுகிய காலத்தில் செய்யப்பட்ட சிலை என்பதால் சிறு தவறு நேர்ந்திருக்கலாம். நாங்கள் செய்த தவறை நாங்களே சரி செய்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.
மேலும், சிலை தோற்றம் குறித்து சர்ச்சை எழுந்திருப்பது தனக்கு வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறிய அவர், ஜெயலலிதா சிலையை சீரமைத்து கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதை எனது செலவிலேயே சரி செய்வேன் என்றும் கூறி உள்ளார்.
அதே நேரத்தில் நாடு முழுவதும் எத்தனையோ பெரிய தலைவர்களுக்கு சிலை வடிவமைப்பு கொடுத்துள்ளோம், ஆனால், நாங்கள் தயாரித்த ஒரு பெரிய தலைவரின் சிலை சர்ச்சைக்குள்ளாகி இருப்பது இதுவே முதல் முறையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.