சென்னை:
மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவை சந்திக்க அங்கிருப்பவர்கள் அனுமதிக்க மறுப்பதாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விஜயகுமார் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடன்பிறந்த சகோதரர் ஜெயக்குமாரின் மகள் தீபா. இவர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் “என்னுடைய மிக பிரியமான அத்தை ஜெயலலிதா. அவரது கைகளை பிடித்து “உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள்” என்று கூற விரும்புகிறேன். ஆனால், என்னைப் பார்க்க அங்கிருப்பவர்கள் அனுமதிக்கவில்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “ என் அத்தை ஜெயலலிதாவின் உடல் நலம் பாதிக்கப்பட்ட விஷயத்தை ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டேன். இதையடுத்து உடனே சென்னைக்கு வந்தேன். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்குச் சென்று, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கேட்டேன். ஆனால் அங்கிருப்பவர்கள் என்னை அனுமதிக்கவில்லை.
தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனையிலேலே காத்திருந்தும் பயனில்லை” என்று சோகத்துடன் சொல்லியிருக்கிறார் தீபா.
மேலும் அவர், “என்னுடயா அப்பா கடந்த 1995ஆம் ஆண்டில் இறந்தார். அப்போது எனது அத்தை எங்களது வீட்டுக்கு வந்திருந்தார். மிகுந்த பாசத்துடன் பேசினார்.
ஆனால், கடந்த 2012ஆம் ஆண்டில் எனது அம்மா விஜயலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, என்னால் எனது அத்தையை தொடர்பு கொள்ளவே முடியவில்லை. சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலகி இருக்குமாறு செய்துவிட்டனர். உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை” என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் தீபா ஜெயக்குமார்.