டில்லி,

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடரப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி.யின் மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

75 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 5ந்தேதி மரணமடைந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக அரசியல் கட்சியினரும், அதிமுக தொண்டர்களும் கூறி வந்தனர்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் எனவே அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட வேண்டும் என்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.

தலைநகர் டில்லியில் உள்ள சுப்ரீம் கோர்டில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட எம்.பியான சசிகலா புஷ்பா வழக்கு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

“ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பாக மக்களிடம் கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே அவற்றை வெளியிட வேண்டும். மேலும் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது. எனவே இதில் உண்மையை கண்டறிய சி.பி.ஐ. மூலம் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று கூறி இருந்தார்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது. வக்கீல்கள் வாதத்துக்கு பிறகு சசிகலா புஷ்பாவின் மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அது போல தெலுங்கு அமைப்பு சார்பில் தொடரப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.