சென்னை: தமிழக அரசுமையாக்க்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ யாருக்கு? என்பது குறித்து, சென்னை உயர்நீதி மன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்குகிறது. இன்று பிற்பகல் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக தமிழகஅரசு மாற்றி அரசாணை வெளியிட்டது. ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவிடமாக மாற்ற உள்ளதாக 2017 ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். அந்த இடத்தை தமிழக அரசு அரசுடைமை ஆக்குவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதற்கான கட்டணமும் கீழமை நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.
இதை எதிர்த்து, அவரது வாரிசு என அறிவிக்கப்பட்டுள்ள, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், போயஸ்கார்டன் வேதா இல்லம் அரசுடமை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயநீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி இன்று தீர்ப்பு வழங்குகிறார்.