
மைசூர்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெற வேண்டி மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன், விநாயகர், ஆஞ்சநேயர் விக்கிரகங்களுக்கு ரூ.1.60 கோடி மதிப்பில் தங்கக் கவசம் மற்றும் வெள்ளி நகைகள் காணிக்கை செலுத்தப்பட்டு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
முதல்வருக்கு பிடித்தமான கோயில்களில் ஒன்று மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில், ஒவ்வொரு வருடமும் பிறந்தநாளின்போது அங்கு விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா தனது தோழி சசிகலாவுடன் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு நேரில் வந்து பூஜை செய்தார். அதன்பிறகு அவர் மைசூருக்கு வரவில்லை.
ஜெயலலிதா இளமை காலத்தில் கர்நாடகாவில் வாழ்ந்தபோது, ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு சென்று அம்மனுக்கு பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 22-ம் தேதியில் இருந்து ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்ய, முதல்வருக்கு நெருக்கமானவர்கள், ஜெயா பப்ளிகேஷன்ஸ், கொட நாடு எஸ்டேட் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் நேற்று அதிகாலை சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்தனர்.
அப்போது, ஜெயலலிதா சார்பாக சாமுண்டீஸ்வரி கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்கு ரூ. 1.18 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கவசம் மற்றும் அணிகலன்களை வழங்கினர்.
மேலும் விநாயகருக்கு ரூ. 22 லட்சம் மதிப்பில் தங்கத்தால் செய்யப்பட்ட கவசம், சங்கு, தும்பிக்கை ஆகியவற்றையும் அணிவித்தனர்.
இதே போல சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் தங்கத்தால் செய்யப்பட்ட கைகள் மற்றும் பாதங்கள், வெள்ளியால் செய்யப் பட்ட பிரபாவளியும் வழங்கினர். அதையடுத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதுகுறித்து, மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் குருக்கள் கூறியதாவது , “சென்னையில் இருந்து ஜெயலலிதா வுக்கு நெருக்கமானவர்கள் வெள்ளிக்கிழமை அதிகாலையில் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு வந்தனர்.
அப்போது, ஆஞ்சநேயர், விநாயகர், சாமுண்டீஸ்வரி அம்மன் ஆகிய விக்கிரகங்களுக்கு தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன அணிகலன்களை வழங்கினர். அதற்கான ரசீது, ஜெயலலிதா பெயரில் ரூ. 1.60 கோடிக்கு வழங்கினோம் என்றார்.
மேலும், முதல்வர் ஜெயலலிதா பூரணமாக குணமடைய வேண்டி 23-ம் தேதி (நாளை) சண்டி ஹோமம் நடத்தப்படுகிறது” என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel