சென்னை,

ஜெ. மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனுக்கு, விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் தலைமை செயலாளரும், தமிழக அரசின் முன்னாள் சிறப்பு ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன் ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 20ந்தேதி விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்.

இந்த ஆணையம் முன்பாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது கணவர் மாதவன், தீபாவின் சகோதரர் தீபக், திமுகவைச் சேர்ந்த சரவணன் உள்ளிட்ட பலர் ஆணையம் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு கருத்துக்களை தெரிவித்தனர். அதுபோல  மற்றொரு முன்னாள் தலைமை செயலாளரான ராமமோகன் ராவ், மற்றும் மருத்துவர்கள் சுதா சேஷையன், சத்தியபாமா, சசிசகலா உறவினர் விஷ்ணுபிரியா உள்பட பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து, ஜெயலலிதாவின் பாதுகாவலராக இருந்த பெருமாள்சாமி, ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், தற்போது முன்னாள் தலைமை செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.