டெல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலப் பாதிப்பு காரணமாக 75 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது திடீர் மரணம் சலசலப்பை ஏற்படுத்தியது. அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக அதிமுகவினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, அப்போதைய  எடப்பாடி அரசு  2017-ம் ஆண்டு,ஓய்வுபெற்ற நீதிபதி  ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை நடைபெற்று வந்தது. 100க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் விசாரணை நடத்தி வந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையின் வழக்கை ஏற்று, ஆறுமுகம்சாமி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

பின்னர் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, அப்போலோவின் கோரிக்கையை நிராகரித்ததுடன், ஆறுமுகசாமி ஆணையம் செயல்பட அனுமதி வழங்கியதோடு, ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கவும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் எய்ம்ஸ் மருத்துவர்கள் கொண்ட குழு ஆறுமுசாமி ஆணையத்துக்கு உதவ அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில், ஜெயலலிதாவின் நோய்களுக்கு  அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.