சென்னை,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.15 கோடி செலவில் நினைவு மண்டபம் கட்டுவது என தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை கோட்டையில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தொடர்பாக அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இன்னும் ஒரு மாதத்தில் ஜெயலலிதாவின் முதல் நினைவு தினம் வர உள்ள நிலையில், நினைவு மண்டபம் கட்டுவது குறித்தும், முதலாம் ஆண்டு நினைவு தினத்தை எப்படி கொண்டாடுவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், இரட்டை இலை விவகாரம், டெங்கு உயிரிழப்பு, கந்துவட்டி கொடுமை போன்றவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும், பேரறிவாளனின் பரோல் குறித்தும் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே அமைந்துள்ள ஜெயலலிதாவின் சமாதியை தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் வந்து பார்வை, அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். ஏற்கனவே நினைவிட வடிவமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதைத்தொடர்ந்து அதற்காக . ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஒரு வருடத்தில் நினைவிடம் அமைக்கும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.