சென்னை:
போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் வருமான வரித் துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து பதிவை வெளியிட்டுள்ளார்.
பின்னர் தூத்துக்குடியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,‘‘எப்படியாவது பதவியை காப்பாற்றிக் கொள்ள நடத்தப்படும் சோதனை இது. மக்களும், தொண்டர்களும் ஆதரிக்கும் எங்களை புறக்கணித்துவிட்டு, இங்கே கால் ஊன்ற நினைப்பவர்களுக்கு உதவியாக செயல்படுகின்றனர். தமிழக மக்களுக்கும், அதிமுக தொண்டர்களுக்கு செய்யப்பட்ட துரோகம். இதற்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெயலலிதா எங்களுக்கு தெய்வம் மாதிரி. அவர் இருந்த வீடு எங்களுக்கு கோவில். அவர் வாழ்ந்த அறை எங்களுக்கு மூலஸ்தானம் போன்றது.
ஜெயலலிதா அறைக்கு யாரும் செல்லமாட்டார்கள். சசிகலா யாரையும் அனுமதிக்கமாட்டார்கள். ஜெயலலிதா அறையில் எதாவது கிடைக்காதா? என்ற எண்ணத்தில் அங்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். நான் தூத்துக்குடியில் இருப்பதால் அங்கு செல்ல முடியவில்லை. அதனால் எனது மைத்துனர் விவேக்கை அனுப்பி வைத்துள்ளேன். அம்மா ஆட்சி நடத்துவதாக கூறுபவர்கள் இந்த செயலுக்கு என்ன பதில் கூறி போகிறார்கள் என்று பார்ப்போம்’’ என்றார்.