சென்னை:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது, ஜெ.விடம் போலியாக கைரேகை பெற்ற விவகாரம் தொடர்பாக பரபரப்பாக குற்றம்சாட்டப்பட்ட டாக்டர் பாலாஜிக்கு தமிழகஅரசு பதவி உயர்வு அளித்து கவுரவித்து உள்ளது. அவரை  அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமித்து அதிமுக அரசு கவுரவப்படுத்தி உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த டாக்டர் சரவணன்  வழக்கு தொடர்ந்தார். அப்போது,  வேட்பாளரை பரிந்துரை செய்து தேர்தல் கமிஷனுக்கு அ.தி.மு.க. சார்பில் அனுப்பிய படிவத்தில் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்ததில் மனுதாரர் தரப்பில் சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து டாக்டர் பாலாஜி என்பவர் ஐகோர்ட்டில் ஆஜராகி, தனது முன்புதான் ஜெயலலிதாவின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டது என்று வாக்குமூலம் அளித்தார். 2016-ம் ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவிடம் அனைத்து ஆவணங்களையும் வாசித்துக்காட்டி, படிவத்தில் அவரது பெருவிரல் ரேகையை பதிவு செய்ததாக டாக்டர் பாலாஜி வாக்குமூலம் அளித்தார்.

வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,  ‘டாக்டர் பாலாஜி உயர்நீதிமன்றத்தில் பொய்யான வாக்குமூலத்தை அளித்துள்ளது உறுதி செய்யப்பட்டது ஜெயலலிதாவின் கைரேகை போலியானது என்றும், ஆா்பி சட்டப்படி கைரேகை வாங்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த நிலையில், டாக்டர் பாலாஜிக்கு தமிழகஅரசு உதவி உயர்வு அளித்து உள்ளது. அதிமுகவுக்கு விசுவாசமாக நடந்துகொண்டதால், அவரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக நியமித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகஅரசின் இந்த உத்தரவு மற்ற மருத்துவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

: