சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார் என்று கவர்னர் வித்யாசாகர் ராவ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 22ந் தேதி ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி கேட்டறிய தினமும் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.
முதல்வர் உடல்நிலை பற்றி வதந்திகளும் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.
இந்நிலையில் தமிழக கவர்னர் வித்தியாசாகர் ராவ் இன்று மாலை சென்னை வந்தார்.
மாலை சுமார் 6.45 மணி அளவில் அப்பல்லோ மருத்துவமனை வந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

அப்போது முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் மற்றும் சிகிச்சை அளிக்கப்படும் விவரங்கள் குறித்து அப்பல்லோ மருத்துவர்களிடன் கேட்டறிந்தார். பின்னர் இரவு 7.10 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து திரும்பி ஆளுநர் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.
கவர்னர் மாளிகை சென்றபின், முதல்வர் சந்திப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நலமுடன் இருக்கிறார். சிகிச்சை பெறும் வார்டுக்கு நேரில் சென்று பார்த்தேன். ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்கள் விளக்கி கூறினர்.
ஜெயலலிதா உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். உடல் நிலை தேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறப்பாக சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களுக்கு நன்றி.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel