டோக்கியோ: உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறுவதற்கான போட்டியொன்றில், மொத்தம் 14 கோல்களை அடித்து அசத்தியுள்ளது ஜப்பான் அணி.

மங்கோலிய அணிக்கெதிராகத்தான் இந்த அதிரடியை நிகழ்த்தியுள்ளது ஜப்பான். ஆனால், பதிலுக்கு மங்கோலிய அணியால் ஒருகோல் கூட அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல், கொரோனா காரணமாக ஜப்பான் அணி, கால்பந்து போட்டி எதிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதற்கான அறிகுறி எதுவுமின்றி, பிரமாதமாக செயல்பட்டது ஜப்பான் அணி.

முதல் பாதி ஆட்டத்தில், 5 கோல்களை அடித்தது ஜப்பான் அணி. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது ஜப்பான். பிறகு, இரண்டாவது பாதி ஆட்டத்தில் 9 கோல்களை அடித்தது அந்த அணி.

இதன்மூலம், தகுதிச்சுற்றில், தான் இதுவரை பங்கேற்ற 5 போட்டிகளிலும் வென்றுள்ளது அந்த அணி. உலகக்கோப்பை தகுதிச்சுற்றில், ஜப்பான் அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி இதுவேயாகும்.