டோக்கியோ
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்க உள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
ஜப்பானில் இதுவரை 85 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 1600 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 78 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,400க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.
ஜப்பான் அரசு அந்நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி அளிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்காக அரசு ஏற்கனவே நிலுவையில் வைத்திருந்த நிதியில் இருந்து 67 லட்சம் கோடி யென் ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை அடுத்த வாரம் அமைச்சரகம் கூடி முடிவு செய்ய உள்ளது.
ஜப்பான் அரசு கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி உடன் இன்ஃப்ளுயன்சா உள்ளிட்டவற்றுக்கும் எதிரான தடுப்பு மருந்தும் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வருடமாக ஜப்பான் அரசு இன்ஃப்ளுயன்சா தடுப்பூசி அளிக்கும் நிகழ்வினை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.