டோக்கியோ
ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜப்பான் அரசு அவசரகால நிலையை அறிவித்துள்ளது
ஜப்பானில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 2.52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 3,719 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் 2.07 லட்சம் பேர் குணம் அடைந்து தற்போது சுமார் 41,600 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதையொட்டி ஜப்பான் அரசு கடும் கட்டுப்பாட்டு விதிகளை அறிவித்துள்ளது. இந்த கொரோனா பாதிப்பு ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் அதிகமாக உள்ளது.
கடந்த வியாழக்கிழமை தலைநகர் டோக்கியோ மற்றும் மூன்று அண்டை மாகாணங்களில் கொரோனா வைரசின் பரவலைத் தடுப்பதற்காக ஒரு வரையறுக்கப்பட்ட அவசரகால நிலையை அரசு அறிவித்தது. இதன்படி டோக்கியோ மற்றும் சைட்டாமா, கனகாவா மற்றும் சிபா மாகாணங்களில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 7 வரை அவசரநிலை அமலில் இருக்கும்.
இங்கு நாட்டின் மக்கள் தொகையில் 30 சதவீதம் பேர் உள்ளதால் இவை மிகவும் ஆபத்து உள்ள பகுதிகள் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. . இதையொட்டி தற்போது, பள்ளிகள் வணிக தளங்கள், பார்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஜப்பான் பிரதமர் யோஷிஹைட், ”ஜப்பான்அரசு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரத்திற்குச் சேதத்தைக் குறைக்க முயல்கிறது,
அத்துடன் வைரஸை முழுமையாகத் தோற்கடிக்க முயல்கிறது. தற்போது உலகளாவி உள்ள கொரோனா தொற்று நாங்கள் எதிர்பார்த்ததை விட கடுமையானது, ஆயினும் இதை நாம் சமாளிக்க முடியும் என்று நான் நம்புகிறேன், ”இதற்காக சில கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கையைச் சகித்துக்கொள்ளக் குடிமக்களை நான் கேட்டுக் கொள்கிறேன் .” என்று தனது தொலைக்காட்சி செய்தி உரையில் தெரிவித்துள்ளார்..