ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் சனே டகாய்ச்சி தலைமையிலான ஆளும் கட்சி, கீழவையில் மூன்றில் இரண்டு பங்கு அளவுக்கு மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் என்ற பெரும் செல்வாக்கே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த வெற்றி, நாட்டின் பாதுகாப்பு, குடியேற்றம் உள்ளிட்ட பல கொள்கைகளில் பழமைவாத மாற்றங்களை கொண்டு வர உதவும் என்று கூறப்படுகிறது.

டகாய்ச்சி தலைமையிலான லிபரல் டெமோக்ரடிக் கட்சி (LDP) தனியாகவே 316 இடங்களை கைப்பற்றியுள்ளது. 465 உறுப்பினர்களைக் கொண்ட கீழவையில் பெரும்பான்மை பெற 261 இடங்கள் போதுமான நிலையில், இந்த வெற்றி மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

1955-ல் LDP தொடங்கப்பட்டதிலிருந்து இது ஒரு புதிய சாதனை. இதற்கு முன்பு, 1986-ல் முன்னாள் பிரதமர் யாசுஹிரோ நகசோனே தலைமையில் கட்சி வென்ற 300 இடங்கள் தான் சாதனையாக இருந்தது.

இதனுடன், புதிய கூட்டணிக் கட்சியான ஜப்பான் இன்னோவேஷன் கட்சி (JIP) வென்ற 36 இடங்களையும் சேர்த்தால், டகாயிச்சி தலைமையிலான ஆளும் கூட்டணி மொத்தமாக 352 இடங்களை கைப்பற்றியுள்ளது.

LDP தலைமையகத்தில், வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பெயர்களுக்கு மேலே டகாயிச்சி சிவப்பு நிற ரிப்பனை ஒட்டியபோது, கட்சி நிர்வாகிகள் கைத்தட்டி உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.

மேலவையில் முழு பெரும்பான்மை இல்லாவிட்டாலும், அதிக அதிகாரம் கொண்ட கீழவையில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றி, சீனாவுடன் அதிகரிக்கும் பதட்டங்கள், அமெரிக்காவுடன் உறவுகளை வலுப்படுத்தும் முயற்சி, ஜப்பானின் பொருளாதாரம் மற்றும் இராணுவ திறனை மேம்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றில் டகாய்ச்சி வலதுசாரி கொள்கைகளை தீவிரமாக முன்னெடுக்க உதவும் என்று கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]