nethaji1
இந்திய சுதந்திரப் போராட்ட நாயகன் நேதாஜியின் மரணம் குறித்த தெளிவான தகவல்களைத் திரட்ட இந்திய அரசு முயற்சித்து வருவது தெரிந்ததே.
அவரது குடும்பத்தினரில் சிலர் அவர் கும்நாமிபாபா என்ற பெயரில் தனது அடையாளங்களை மறைத்துக் கொண்டு உயிருடன் வாழ்ந்ததாக இன்னும்  நம்புகின்றனர். ஆனால் நேதாஜி சபாஷ் சந்திரபோஸ் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி தைபையில் ஒரு விமான விபத்தில் அகால மரணமடைந்ததை ஜப்பான் அரசு உறுதிப்படுத்தி வெளியிட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கின்றன.
நேதாஜி இறந்தவுடன் அதுகுறித்த தகவல்கள் தல்வால்கர் என்ற மூத்த பத்திரிக்கையாளாருக்கு ஜப்பான் அரசால் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் இவருக்கு  91 வயதாகிறது. இதுதான் நேதாஜியின் மரணம் குறித்து வெளியான முதல் அதிகாரபூர்வ ஆவணம். இந்த ஆவணங்களை தல்வால்கர் இந்துஸ்தான் டைம்ஸ் இதழுடனும், லண்டனில் வாழும் நேதாஜியின் பேரன் ஆஷிஷ் ரேயுடனும் பகிர்ந்திருக்கிறார்.
அனால் ஜப்பான் இந்தியாவிடம் 1956-இல்தான் இந்த ஆவணங்களைப் பகிர்ந்திருக்கிறது,  ஜப்பான் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்காவிடம் சரணடைந்த மூன்றாம் நாளில் நேதாஜி விமான விபத்தில் மரணமடைந்ததாக ஜப்பான் தெரிவித்திருக்கிறது,
சம்பவம் நடந்த ஆகஸ்ட் 18,1945-அன்று  நேதாஜி ஜப்பானிய 97-2 என்ற ஆயுதம்தாங்கிய ஜப்பானிய போர் விமானத்தில் பறக்கும்போது ப்ரொப்பல்லர் சேதமடைந்ததால் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி விழுந்து நொறுங்கியிருக்கிறது. அதனுள் இருந்து எரிந்த உடலுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேதாஜியை காப்பாற்ற அவருடைய உதவியாளர் ஹபிபூர் ரகுமான் தானும் பலமாக காயமடைந்த நிலையிலும் கடுமையாக   முயற்சித்திருக்கிறார்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பயனின்றி இறந்ததாக அந்த ஆவணம் கூறுகிறது. அவரது இறுதிச்சடங்கு ஆகஸ்ட் 22-ஆம் தேதி தைபையிலேயே நடந்து முடிந்துவிட்டதாகவும் அந்த ஆவணம் கூறுகிறது.