இன்று (ஜனவரி 4ம் தேதி) தமிழக அரசியலில் மிக முக்கியமான நாள். நீண்டகாலமாக தி.மு.க.வினர் மத்தியில் எதிர்பார்த்துவந்த விசயம் இன்று நடந்தேறியிருக்கிறது.
தி.மு.க. பொதுக்குழு கூடி, மு.க. ஸ்டாலினை செயல் தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறது.
இதற்காக கட்சி விதியில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே, தி.மு.க. உருவானபோது, தலைவர் பதவியை பெரியாருக்காக காலியாக வைத்திருந்தார் அண்ணா.
அவரது மறைவுக்குப் பிறகு அதிகாரத்துக்கு வந்த கருணாநிதி, கட்சி விதிகளில் மாற்றம் செய்து, தானே தலைவர் பொறுப்பில் அமர்ந்தார்.
தற்போது, மீண்டும் (தலைமைப் பொறுப்பு குறித்து) விதி மாற்றப்பட்டு, ஸ்டாலின் செயல் தலைவர் ஆகியிருக்கிறார்.
கட்சி விதிப்படி இது செயல் தலைவர் என்றாலும், ஸ்டாலின்தான் முக்கிய முடிவுகளை எடுப்பார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இனி, “தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலில்” என்கிற வாக்கியங்களோடு ஸ்டாலினின் உத்தரவுகள் வெளியாகும்.
தி.மு.க.வில் ஆகப்பெரும்பாலோர் விரும்பிய மாற்றம்தான் இது.
தி.மு.க.வுக்கு முழுப்பொறுப்பேற்றிருக்கும் ஸ்டாலினின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அனைவரும் கூர்ந்து கவனிப்பர்.
இன்றைய தினம் அ.தி.மு.க.வுக்கும் முக்கியமான நாள்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா, தனது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் இன்று முதல் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
பொதுச்செயலாளராக பதவி ஏற்ற பிறகு, சசிகலா ஆற்றும் முக்கிய கட்சிப்பணி இதுவே எனச் சொல்லலாம். இனி அவரது செயல்பாடுகளும் கூர்ந்து கவனிக்கப்படும்.
உ.பி. அரசியலிலும் இன்று முக்கியமான நாள்.
ஆளும் சமாஜ்வாடி கட்சி பிளவுபட்டு நிற்கிறது. கட்சியின் தலைவர் முலாயம் ஒரு பக்கமும், அவரது மகனும் முதல்வருமான அகிலேஷ் மறுபக்கமும் கட்டியைப் பிடித்து இழுக்கிறார்கள். கட்சி சின்னமான சைக்கிள் தங்களுக்கே வேண்டும் என இரு தரப்புமே தேர்தல் கமிசனிடம் மனு அளித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று மீண்டும் இருவரும் சந்தித்து பேசியதாகவும் அதன் தொடர்ச்சியாக இன்றும் சந்திப்பு நடக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
“சண்டையா.. சமாதானமா” என்று ஒரு தமிழ்ப்படத்தில் வரும் டயலாக் வெகு பிரசித்தம். இன்றைய முலாயம் – அலேஷ் சந்திப்பின் முடிவில் இரண்டில் ஒன்று தெரியவரும்.
எப்படி இருந்தாலும், உபி. அரசியலில் இது முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும்.