தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராக பணியாற்றியவரும், காவிரிக்காக தனது பதவியை துச்சமென தூக்கி எறிந்த காவிரி தந்த தலைமகன் வாழப்பாடி ராமமூர்த்தியின் 79வது பிறந்தநாள் இன்று.

இந்த நாடாளுமன்றத்துக்கு 6 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவரும், மத்திய அமைச்சரவையில் பல்வேறு துறைகளில் பதவி வகித்தவரும், தமிழக காங்கிரஸ் கட்சிக்கு தலைமை பொறுப்பேற்று கட்சியை திறம்படி வழிநடத்தியவரும் வாழ்ப்பாடியார் என்று அன்போடு அழைக்கப் படுபவரு மான வாழ்ப்பாடி ராமமூர்த்தியின் பிறந்த நாள் இன்று. அதையொட்டி தமிழக காங்கிரசார் அவரது உருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
1940ம் ஆண்டு இதே நாளில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அவதரித்த ராமமூர்த்தி, அரசியல் ஆர்வம் காரணமாக தனது 19வது வயதிலேயே தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில், 1959ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர், பின்னர், அங்கிருந்து விலகி அகில இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
வாழப்பாடியாரின் சுறுசுறுப்பான அரசியல் பணி காரணமாக அவருக்கு காங்கிரஸ் தலைமை, 1968ம் சேலம் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பை வழங்கி கவுரவித்தது. இதையடுத்து அவரது அரசியல் பயணம் மேலும் விறுவிறுப்பானது. மக்களிடையே வாழ்ப்பாடி ராமமூர்த்தியின் புகழ் பரவத்தொடங்கியது. தொழிலாளர்களிடையேயும் அவரது புகழ் ஓங்கியது. இதன் காரண மாக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ. என். டி. யூ. சியின் தலைவராக பொறுப்பேற்று திறம்பட செயல்பட்டார். அதன் காரணமாக அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் தேடி வந்தது.
அதையடுத்து, 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து, 1980, 1984, 1989, 1991 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களிலும் கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியிலிருந்தும், 1998 தேர்தலில் சேலம் மக்களவைத் தொகுதியிலிருந்தும் வெற்றி பெற்று மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மக்களவையில் வாழப்பாடியாரின் அறிவாற்றல் மிக்க நடவடிக்கை காரணமாக, 1991-92ம் ஆண்டு பி. வி. நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இடையில் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அங்கிருந்து விலகி திவாரி காங்கிரசில் இணைந்து, தமிழக தலைவராக பொறுப்பேற்று கட்சிப்பணியாற்றினார்.

அந்த சமயத்தில் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டார். 1996 சட்டமன்றத் தேர்தலில் திவாரி காங்கிரஸ் மக்களிடையே எடுபடாத நிலையில், 1998 நாடாளு மன்றத் தேர்தலின் போது தமிழக ராஜீவ் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார். தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர் கொண்டது. இதில் வெற்றிபெற்ற வாழப்பாடியால், மத்தியில் ஆட்சி அமைத்த வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் நடைபெற்ற 1999ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் அதே கூட்டணியில் இடம் பெற்றார். ஆனால்… இந்த முறை வெற்றிபெற இயலாத நிலையில், 2001ம் ஆண்டு தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்து விட்டு மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.
இந்த நிலையில், 2002ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சசரவையில் வாழப்பாடியார் மத்திய அமைச்சராக இருந்தபோது தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை எழுந்தது. இதன் காரணமாக இரு மாநிலங்களிலும் பரபரப்பு நிலவி வந்தபோது, மத்திய காங்கிரஸ் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்த நிலையில், தமிழக மக்களுக்காக குரல் கொடுத்த வாழ்ப்பாடியார் தனது அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து காவிரி தந்த தலைமைகனாக ஜொலித்தார்.
இன்றைய காலக்கட்டத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒவ்வொருவரும் தங்களது பதவிகளை மக்களுக்காக உபயோகப்படுத்தாமல், பகட்டாகவும், பவிசாகவும், தொழிலாகவும் கடைபிடித்து வரும் நிலையில், மக்கள் பிரச்சினைக்காக தனது பதவியை உதறிய வாழப்பாடி யாரின் புகழ் வரலாறு இருக்கும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
[youtube-feed feed=1]