பெங்களூரு: குடும்ப அட்டைகள், மூத்த குடிமக்கள் அடையாள மற்றும் சுகாதார அட்டைகள் போன்ற பல்வேறு அரசு ஆவணங்களை வீட்டுக்கே வந்து வழங்கும் ‘ஜனசேவகா‘ திட்டத்தை, கர்நாடக அரசு ஒரு சில நகராட்சி வார்டுகளில் முதல்கட்டமாக அறிமுகப்படுத்தியது.
முதலமைச்சர் யெடியூரப்பாவால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் 11 துறைகள் சார்ந்த 53 சேவைகள் உள்ளன. “சகலா திட்டத்தின் கீழ் வரும் ஜனசேவகா என்பது வீட்டு வாசலில் அரசாங்கத் திட்டங்களின் நன்மைகளைப் பெறும் ஒரு அம்சமாகும்.
“இந்தத் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம் கர்நாடகக் குடிமக்களின் வாழ்க்கையை இலகுவாக்குதே எங்கள் குறிக்கோள்“ என்று முதல்வர் கூறினார். சகலா திட்டமானது, அரசாங்க சேவைகள் குறித்த காலத்தில் மக்களுக்கு சென்றடைவதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்கான திறனை வளர்ப்பதற்காக புதுமையான மற்றும் திறமையான மேலாண்மை முறைகளைக் கடைபிடிக்கப்படுகிறது.
சகலா, ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் எஸ். சுரேஷ் குமார் இத்திட்டம் பற்றிக் கூறுகையில், “தரசஹள்ளி பகுதியில் பைலட் அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது மகாதேவபுரா, பொம்மநஹள்ளி மற்றும் ராஜாஜி நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்“, என்றார்.
இத்திட்டம் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பயனளிக்கும் என்றும் இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டால் பெங்களூரு முழுவதும் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளிலும் இது செயல்படுத்தப்படும் என்று அவர் மேலும் கூறினார்.
இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வார்டிலும் ஒரு தன்னார்வலர் இருப்பார். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்தத் திட்டத்திற்குக் கட்டணமில்லா ஹெல்ப்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இச்சேவைகளுக்குக் கட்டணமாக ரூ.115 வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.