டில்லி
மனதின் குரலை விட மக்களின் குரல் தான் முக்கியம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று வானொலியில் மன் கி பாத் நிகழ்வில் உரையாற்றுவார். அவ்வகையில் நேற்றும் பிரதமர் மோடி வானொலியில் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
அந்நிகழ்வில் மோடி, “தற்போதைய கொரோனா இரண்டாம் அலை நாட்டையே உலுக்கி உள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு உதவ அனைத்துவகையிலும் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார். இதற்குக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி தனது டிவிட்டரில், “நெருக்கடியான காலங்களில் மக்களுக்குப் பொறுப்பான தலைவர்கள் தேவை. இந்தியாவில் தற்போது சிஸ்டம் தோல்வி அடைந்து விட்டது. மக்கள் குரல் தான் முக்கியம். மனதின் குரல் அல்ல. அனைத்து அரசியல் பணிகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்ய வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.