டில்லி
புல்வாமா தாக்குதலுக்கு காஷ்மீர் மாநில இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலாமா இ இந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் காஷ்மீர் மாநிலம் புல்வானா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 45 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு பல உலகத் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடே சோதத்தில் மூழ்கி உளது.
காஷ்மீர் மாநில இஸ்லாமிய அமைப்பான ஜமியத் உலாமா இ இந்த் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதானி செய்தியாளர்களிடம், ”புல்வானா மாவட்டத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதலில் மரணம் அடைந்தோரின் குடும்பத்துக்கு நான் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணம் அடைய பிரார்த்தனை செய்கிறேன்..
இந்த தாக்குதல் நமது ஒற்றுமையை சீர்குலைக்க நடந்துள்ளது. தற்போது நமது நாடு உள்ள சூழ்நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். நமக்குள்ளே உள்ள மத நம்பிக்கை, சாதி, இனம் போன்ற வேற்றுமைகளை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டின் எதிரிகளுக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.
இந்த சோக நேரத்தில் நாம் அனைவரும் வீர மரணம் அடைந்த படையினரின் குடும்பத்துக்கு ஆறுதல் அளிக்க வேண்டும்.
எங்கள் இயக்கம் ஆரம்பித்த நாள் முதலே பயங்கரவாதத்துக்கு எதிராகவே உள்ளது. மதத் தீவிரவாதம், வன்முறை ஆகியவைகளுக்கு எதிராக நாங்கள் எப்போதும் பிரசாரம் செய்து வருகிறோம். நமது நாடு என்றும் ஒற்றுமையுடனும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் இருக்க நான் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.