டில்லி
காஷ்மீர் மாநில தீவிரவாத இயக்கமான ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை தேச எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக அரசு தடை செய்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இயங்கி வரும் பிரிவினை இயக்கமான ஜமாத் இ இஸ்லாமி என்னும் இயக்கம் நாட்டுக்கு எதிராக பல தீவிரவாத நடவடிக்கைகளை நடத்தி வந்தது. அது மட்டுமின்றி எதிரி நாட்டு பயங்கரவாத இயக்கங்களுடன் இந்த இயக்கத்துக்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு முன்பிருந்தே இந்த இயக்கம் பாதுகாப்புத் துறையின் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தது. நேற்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய உள்துறை அமைச்சரவை மேல் மட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஜமாத் இ இஸ்லாமி இயக்கத்தை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.
சென்ற மாதம் 14 ஆம் தேதி நடந்த புல்வாமா தக்குதலுக்கு பிறகு இந்த இயக்கத்தை சேர்ந்த பல தலைவர்களும் தொண்டர்களும் கைது செய்யபட்டுள்ளனர். தற்போது இந்த இயக்கத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக இந்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.