கோவை:  கோவை கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய ஜமாத் மறுப்பு தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இனால், கார் குண்டுவெடிப்பில் பல்வேறு சந்தேகங்களும் சர்ச்சைகளும் அதிகரித்து வருகின்றனர். கோவையின் முக்கிய பகுதிகளில்  துணை ராணுவத்தினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கோவையில் வெடிகுண்டு ஏற்றப்பட்ட கார் எதிர்பாராதவிதமாக வெடித்து, அதிலிருந்த சேர்ந்த ஜமேசா முபீன் உடல்கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கைது  செய்யப்பட்டவர்கள் சிலர் முன்னாள் நடைபெற்ற கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு தொடர்புடைய ஒரு பயங்கரவாதியின் உறவினர் என்றும், பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ளவருடன் தொடர்புடையவர்கள் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்த விவகாரத்தை என்ஐஏ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தமிழக காவல்துறையே விசாரிக்கும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வாலண்டியராக தெரிவித்துள்ளதும் விமர்சனங்களுக்காகி வருகிறது. இந்த நிலையில், கார் குண்டுவெடிப்பில் உயிரிழந்த முபீன் உடலை அடக்கம் செய்ய உக்கடம் பகுதி ஜமாத் மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஞாயிற்று கிழமை அன்று அதிகாலை 4.10 மணிக்கு கோட்டைமேடு பகுதியில் இந்து கோவில் அருகே கார் ஒன்று சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் கார் முழுவதும் இருந்தது. காருக்குள் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபீன் உடல்கருகி உயிரிழந்தார். சம்பவம் அறிந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். காவல்துறையினர் , தடவியல் நிபுணர்கள் வந்து சோதனை செய்தனர். அதில், இரும்பு ஆணிகள், பால்ரஸ் உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.  நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் ரசாயணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் ஜமேசா முபீன் பற்றி விசாரிக்கையில், இவர் மீது, கடந்த 2019ஆம் ஆண்டு என்.ஐ.ஏ பிரிவினர் சோதனை நடத்தியுள்ளனர். போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார் விபத்து சம்பவத்தை அடுத்து, அவரது வீட்டில் சோதனை நடைப்பெற்றது. அதில், வெடிகுண்டு தயாரிக்க மூலப்பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், ஏதேனும், நாசவேலைக்கு திட்டமிட்டிருக்கலாம் என கூறபடுகிறது. இதையடுத்து, கோவை மாநகரில் காவல்துறையுடன் இணைந்து துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கார் குண்டு வெடிப்புக்கு முன்பு, சனிக்கிழமை இரவு 11.25 மணியளவில் ஜமேஷா முபீன் இல்லத்தில் இருந்து அவர் உள்பட 5 பேர் மர்ம மூட்டையை எடுத்து சென்றுள்ளனர். இது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.  வழக்கில் தொடர்புடைய ஐந்து நபர்களை கைது தனிப்படை காவல்துறையினர் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜமேஷா முபின் பயணித்த காரில் ஆணி, பால்ஸ் குண்டுகள், இரண்டு சிலிண்டர் தடயங்கள் கிடைக்கப்பெற்றன. முகமது தல்கா  (25) , முகமது அசாருதீன் வயது (23) இந்த இருவரும் உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதுபோல் முகமது ரியாஸ்  (27), ஃபிரோஸ் இஸ்மாயில் வயது (27), முகமது நவாஸ் இஸ்மாயில்  (26).  இந்த மூன்று பேரும் உக்கடம் G.M.நகர்  பகுதியை சேர்ந்தவர்கள் இவர்களை கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை முபினிடம் விசாரணை நடத்தியதும்,  அவரிடம் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அப்போது அவர் விடுவிக்கப்பட்டதும் தெரிய வந்தது.    முபின் வீட்டில் நடந்த சோதனையில் நாட்டு வெடிகுண்டு செய்வதற்கான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.  இந்த சம்பவத்தை அடுத்து கோவை உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்டுள்ள முகமது நவாஸ் இஸ்மாயில் (26), முகமது ரியாஸ் (27), முகமது தல்கா (25),  பிரோஸ் இஸ்மாயில் (27), முகமது அசாருதீன் (23)  ஆகிய ஐந்து பேரில் முகமது தல்கா கார் கொடுத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   இவர் அல் உம்மா இயக்க தலைவர் பாட்ஷாவின் தம்பி நவாப் கானின் மகன்.   கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் இருப்பவர் நவாப் கான்.

இந்த நிலையில், கோவை அரசு மருத்துவ கல்லூரியில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு, ஜமேசா முபீன்  அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் உடலை பெற்றுக்கொண்டார். ஆனால், சமூக விரோத செயலுக்கு திட்டமிட்டது  போன்ற குற்றங்கள் ஜமேசா முபீன் மீது சுமத்தப்பட்டுள்ளதால் அவரது உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை. ஜமாத் அமைதியை விரும்புவதாலும் சமூக விரோத செயலுக்கு துணை போகாமல் இருப்பதற்காகவும் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்ததாக ஜமாத்துக்கள் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஜமேசா முபீன் உடல் மனிதாபிமான அடிப்படையில் பூ மார்க்கெட் ஜமாத்தில்  இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, சென்னையில் கோவை விரைந்த டிஜிபி சைலேந்திரபாபு, கோவையில் கார் குண்டு வெடித்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது,  ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்டதில் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற நாட்டு வெடி தயாரிக்க தேவையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இறந்தவர் மீது வேறு வழக்குகள் எதுவும் இல்லை. இருப்பினும் இறந்தவருடன் தொடர்பில் இருந்த நபர்களை விசாரித்து வருகின்றோம் என்றார்.  வீட்டில் கைப்பற்றப்பட்ட வெடி மருத்துகளை பார்க்கும் போது எதிர்காலத்திற்கான திட்டங்களாக இருக்கலாம். தற்கொலை படையாக இருக்க வாய்ப்பில்லை. சில ஆண்டுகளாக அவருடன் மொபைல் போனில் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். ஓவ்வொரு தனிப்படையும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர் என்று தெரிவித்தார். மேலும்,  அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கோவையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.

இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிககையில்;- 23.10.2022 அன்று காலை கோவை நகரில் உக்கடம் கோட்டைமேடு பகுதியில், சங்கமேஷ்வரர் திருக்கோயில் அருகே அதிகாலை 4.10 மணியளவில் கார் ஒன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததாகவும், காரில் இருந்த ஒரு நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. மேலும், தமிழ்நாடு காவல்துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தியதாகவும் செய்திகள் தெரிவித்தன.

காவல்துறை தலைவர் நேற்றைய பேட்டியின்போது, சம்பவ இடத்தை தடய அறிவியல்துறை நிபுணர்கள், மோப்ப நாய் பிரிவினர் மற்றும் வெடிகுண்டு பிரிவினர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்து வருவதாகவும், காரின் உரிமையாளர் யார் என்பது குறித்தும், சிலிண்டர் வாங்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும், இந்த சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த விபத்தா? அல்லது சதிவேலையா? என்ற கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர் பேட்டியளித்துள்ளார். இறந்த நபரின் பெயர் ஜமேஷா முபின் என்றும், இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரால் விசாரணை செய்யப்பட்டவர் என்றும், அவரது வீட்டில் வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன்படும் வெடிமருந்து பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்தார்.

கோவையில் கார் வெடிகுண்டு வெடித்துள்ளது. வெடிகுண்டு வைத்த காரை இயக்கி, மக்கள் நெரிசல் மிகுந்த இடத்தில் வெடிக்கவைத்து, பல உயிர்களை பலி வாங்க சதி செய்த நிகழ்வாகவும் இது கருதப்படுகிறது” என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், விபத்து நடந்த இடத்தில் அபாயகரமான வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆணிகள், கோலி குண்டுகள், இரும்பு குண்டுகள் (பால்ரஸ்) போன்றவை சிதறிக் கிடந்ததாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையிலேயே மிகப் பெரிய சந்தேகத்தை எழுப்புகிறது. இறந்த முபின் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சார்ந்தவன் என்று தெரியவில்லை என பேட்டியின்போது காவல்துறை தலைவர் கூறியுள்ளார். அனைத்து நிலைகளிலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் பேட்டியில் கூறுகிறார்.

அம்மாவின் ஆட்சியின் போதும், தொடர்ந்து அதிமுக அரசு ஆட்சி செய்த போதும் அமைதியான மாநிலமாக காட்சியளித்த தமிழ்நாட்டில், எப்போதெல்லாம் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்கிறதோ, அப்போதெல்லாம், குண்டு வெடிப்பு நிகழ்ச்சிகள் என்பது சர்வசாதாரணமாக நடைபெறும் நிகழ்வாக உள்ளது. தொடர்கதையாகவும் உள்ளது. இந்த குண்டு வெடிப்பு குறித்து உள்துறைக்கு பொறுப்பு வகிக்கும் நிர்வாகத் திறமையற்ற விடியா ஆட்சியின் முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்? உளவுத்துறை மற்றும் காவல்துறையின் செயலற்ற தன்மையை விளக்குவதாகவே இது பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் நிர்வாகத் திறமையற்ற, தவறு செய்பவர்களை கண்டிக்கும் சட்டப்படியான அதிகாரத்தை காவல்துறைக்குத் தராமல், காவல்துறையை தங்களுடைய பொய்யான பழிவாங்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளும் ஒரு ஏவல்துறையாக, இந்த அரசு நடத்துவதே, இப்படிப்பட்ட உளவுத்துறை மற்றும் காவல்துறையின் வீழ்ச்சிக்குக் காரணம்.

நான் பலமுறை எனது அறிக்கையின் வாயிலாகவும், பேட்டிகளின்போதும் அம்மாவின் அரசு எப்படி காவல்துறையை சட்டப்படி நேர்மையாக செயலாற்ற அனுமதித்ததோ, அப்படி இந்த அரசும் காவல்துறையை சுதந்திரமாக, சட்டத்தின்படி செயலாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால், நிர்வாகத் திறமையற்ற இந்த அரசு, பொய்யான காரணங்களுக்காக எதிர்கட்சிகளை பழிவாங்க காவல்துறையை, ஏவல்துறையாக பயன்படுத்துகிறதே தவிர, காவல்துறையை முழு சுதந்திரத்துடன், சட்டப்படி நேர்மையாக பணியாற்ற அனுமதிப்பதில்லை.

எனவே, இந்த கார் குண்டு வெடிப்பு என்பது தற்செயலாக எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தா? அல்லது ஏதேனும் சதி வேலையா? என்றும், அப்படியெனில் இதன் பின்னணியில் சமூக விரோதிகள் எவரேனும் இருக்கின்றனரா என்று காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் ஆட்படாமல் சுதந்திரமாக தீவிர விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளையும், பின்னணியில் உள்ளவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்திகிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

ஓபிஎஸ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், திமுக ஆட்சியில் கொலை, கொள்ளை, வன்முறைகள் அரங்கேறிவருவதாக குறிப்பிட்டுள்ளார். திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டில் அன்றாடம் ஓரிரண்டு கொலைகள் மாறி தற்போது பத்து கொலைகள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. அண்மை காலமாக பெட்ரோல் குண்டு கலாச்சாரம் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. மின்னல் ரவுடி வேட்டை என்ற பெயரில் 1,310 ரவுடிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வந்தன. ஆனால் கள யதார்த்தம் வேறு மாதிரியாக உள்ளது. உதாரணமாக கோவையில் காரில் சிலிண்டர் வெடித்து ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்தபோது, வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை. இதனால் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழ்நாடு காவல்துறைக்கு உள்ளது என குறிப்பிட்டுள்ளார். எனவே, முதலமைச்சர் தனி கவனம் செலுத்தி இதில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள டிவிட்டில், கோவை கார் சிலிண்டர் விபத்து குறித்து புதுப்புது தகவல் வெளியாகி வருவது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. பண்டிகை நேரத்தில் மக்களை பதற்றத்திற்கு ஆளாக்கும் வகையில் நிகழும் இத்தகைய சம்பவங்கள் கவலை அளிக்கின்றன. இதையும் படிக்க- எல்லையில் அண்டை நாட்டு வீரர்களுக்கு இனிப்புகள் பகிர்ந்து தீபாவளி கொண்டாட்டம் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே இது வெளிக்காட்டுகிறது. சட்டம் – ஒழுங்கை பராமரிப்பதும், மக்களிடம் உள்ள பயத்தை தணிப்பதுமே காவல்துறையின் முக்கியமான பணியாக இருக்கவேண்டும். இனி, தமிழ்நாட்டின் எந்த இடத்திலும் இத்தகைய சம்பவங்கள் நடக்காதபடி உளவுத்துறை கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை  இன்று  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கார் வெடி விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ளோம். என்.ஐ.ஏ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளோம். தனது இறப்பு குறித்து முன்கூட்டியே வாட்ஸ் அப்பில் ஜமேஷா முபின் பதிவிட்டு உள்ளார். இறப்பதற்கு முன்பு ஜமேஷா முபின் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவில்லை என டிஜிபி கூறுவாரா? தீவிரவாதிகளின் கூடாரமாக கோவை மாறி வருகிறது. சிலிண்டர் விபத்து குறித்து கோயம்புத்தூர் காவல்துறையின் அறிக்கை விசித்திரமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், கோவையில் கைது செய்யப்பட்டவர்கள் மீது எந்த பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஏன் தேச துரோக வழக்கு பதிவு செய்யவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.