“கொடிய விலங்குகளின் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி, மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கக வேண்டும். இல்லாவிட்டால் அமைதிப் போராட்டம், எல்லைகளைக் கடந்து, வன்முறையாக வெடிக்கக் கூடும். எதிர்பாராத விளைவுகளும் ஏற்படலாம்” என்று பிரதமர் மோடிக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பிரதமர் மோடிக்கு நேற்று எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

“தமிழ்நாட்டில்  சாதி, மதங்களைக் கடந்து, அனைத்து அரசியல் கட்சிகளிடம் இருந்தும் தூர விலகிக் கொண்டு, ஜல்லிக்கட்டுக்காக நடத்துகின்ற போராட்டத்தில், தமிழர்களின் உணர்வுகளை அங்கீகரித்து, நீங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த மின் அஞ்சல் கடிதத்தை அனுப்புகிறேன்.

2016 டிசம்பர் 15 ஆம் நாள் நாடாளுமன்றத்தில் உள்ள உங்கள் அலுவலகத்தில் உங்களைச் சந்தித்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தமிழர்களின் பண்பாட்டுடன் இணைந்து,  நடத்தப்பட்டு வருகின்ற பாரம்பரியமாகமான ஜல்லிக்கட்டு விளையாட்டு குறித்து விளக்கிக் கூறினேன்.

ஸ்பெயின் நாட்டில் காளைகள் போட்டியில்  கழுத்தில் ஈட்டிகளால் சொருகப்பட்டுக்  காளைகள் கொல்லப்படுகின்றன. அதனை ஸ்பெயின் உச்சநீதிமன்றம் அனுமதிக்கின்றது.

அமெரிக்காவின் வர்ஜீனியாவைத் தலைமையகமாகக் கொண்டும், இந்தியாவின் மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்ற பீட்டா அமைப்பும், இந்திய விலங்குகள் நல வாரியமும், தமிழ்நாட்டின் பண்பாட்டின் மீதும் தமிழர்களின் உணர்வுகள் மீதும் தாக்குதல் நடத்தி, ஜல்லிக்கட்டுத் தடைக்குக் காரணமாக இருப்பதால், பீட்டா அமைப்பை இந்தியாவில் தடை செய்ய வேண்டும்.

 

இந்தப் பிரச்சினையில் உண்மைக் குற்றவாளிகள், 2011 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும்தான். காட்டில் உலவும் கொடிய விலங்குகளான சிங்கம், சிறுத்தை, ஓநாய், யானை, புலி ஆகியவற்றுடன் வீட்டில் உள்ள காளை மாடுகளைச் சேர்த்து, 2011 ஜூலை 11 ஆம் தேதி, மத்திய அரசு ஆணை பிறப்பித்தது.

இந்த அடிப்படையில்தான் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டைத் தடை செய்தது.

நேற்றைய தினமும், 2017 ஜனவரி 21 இல், தமிழக ஆளுநர் ஜல்லிக்கட்டுக்காக அறிவித்த அவசரச் சட்டத்தைத் தமிழக மக்கள் ஏற்பதாக இல்லை. குறிப்பாக, இந்திய வரலாறு காணாத வகையில் கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் அமைதி வழி அறப்போராட்டம் நடத்துகின்ற இலட்சோபலட்சம் மாணவர்கள் ஏற்கவில்லை; ஏற்கப் போவதும் இல்லை. கடந்த கால உச்சநீதிமன்ற ஆணைகளின் அடிப்படையில், இந்த அவசரச் சட்டமும் உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படும் என்ற அவர்களின் அச்சம் நியாயமானது.

தமிழக வரலாற்றில் முதன்முறையாக, மாணவர்கள் மட்டும் அல்லாது, தாய்மார்கள் குழந்தைகளுடன், முதியவர்கள் பேரப்பிள்ளைகளுடன் போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். காட்டு விலங்குகளின் பட்டியலில் இருந்து வீட்டுக் காளைகளை நீக்கி, மத்திய அரசு அவசரச் சட்டம் ஏன் கொண்டு வரக் கூடாது என்ற நியாயமான கேள்வியை எழுப்புகின்றனர்.

உங்களுடைய அரசு, உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழர்கள் மனதில் உள்ள வேதனை, மத்திய அரசுக்கு எதிர்ப்பாகவும் ஆத்திரமாகவும் உருவாகும் எனக் கருதுகிறேன்.

காங்கிரசும் தி.மு.க.வும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்கின்றார்கள்.

எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு எந்தத் தடையும் நேராதவாறு, உடனடி நடவடிக்கை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று நல்லெண்ணத்தோடு வேண்டுகிறேன்.

 

தமிழர்களின் விருப்பத்தை நீங்கள் நிறைவேற்றினால், தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் மட்டும் அல்ல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள். இதே கருத்தை வலியுறுத்தித்தான், இம்மாதம் ஜனவரி 16 ஆம் தேதி நீங்கள் குஜராத்தில் இருந்தபோது, எனது மின் அஞ்சல் கடிதத்தை அனுப்பினேன்.

அமைதிப் போராட்டம், எல்லைகளைக் கடந்து, வன்முறையாக வெடிக்கக் கூடும். எதிர்பாராத விளைவுகளும் ஏற்படலாம் என்பதை, உங்கள் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டியது எனது கடமை ஆகும்.

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, மின்னல் வேகத்தில் நீங்கள் அறிவித்தபோது, அதனை முழு மனதோடு வரவேற்றுப் பாராட்டியவன் நான். அதுபோன்ற ஒரு முடிவை, ஜல்லிக்கட்டுப் பிரச்சினையிலும் நீங்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாட்டின் மீதுள்ள அக்கறையால் வேண்டுகிறேன்” இவ்வாறு தனது கடிதத்தில் வைகோ தெரிவித்துள்ளார்.