சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தற்போது தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டம் தேவையில்லை.. நிரந்தர தீர்வே தேவை, அதுவரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
இதன் காரணமாக என்ன செய்வது என்று திக்குதெரியாமல் திணறி வருகிறது தமிழக அரசு.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை மெரினா கடற்கரையில் இரவு பகல் தொடர்ந்து இளைஞர்களின் தன்னெழுச்சி போராட்டம் இன்று 5வதுநாளாக நடைபெற்று வருகிறது.
இந்த போராட்த்தில் லட்சக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதன்காரணமாக தமிழக முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்தார். தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அவசர சட்டத்திற்கான சட்ட முன்வடிவு தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டு இன்று மாலை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதன் காரணமாக நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என முதல்வர் அறிவித்தார். தானே தொடங்கி வைக்க மதுரை செல்வராகவும் கூறினார்.
ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தற்போது இயற்றப்பட்டுள்ள அவசர சட்டத்தை ஏற்க மறுத்து உள்ளனர். ஏனென்றால் இந்த அவசர சட்டம் 6 மாதம் வரை மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மீண்டும் தடை பெற வாய்ப்பு உள்ளது. இதனால் எங்களுக்கு நிரந்தர தீர்வு தேவை எனவும்… அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்து உள்ளனர்.
இதனால் செய்வதறியாது திணறி வருகிறது தமிழகஅரசு.