அலைகடலென ஆர்ப்பரிக்கிறது மெரினா…. இன்னும் தொடர்கிறது போராட்டம்…..
சென்னை,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் மற்றும் போராட்டக்குழுவினரால் அலைகடலென ஆர்ப்பரித்து வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று 5வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது. இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டத்துக்கு, கல்லூரி மாணவ மாணவிகள், வணிகர்கள், ஐடி ஊழியர்கள், திரையுலக பிரமுகர்கள், வழக்கறிஞர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தமிழக அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என தமிழகமே திரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டதில் தங்களையும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்ட திருத்தம் கொண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், போராட்டக்காரர்கள், அவசர சட்டம் தேவையில்லை.. நிரந்தர தீர்வே வேண்டும்… எங்களை ஏமாற்றாதீர்கள்.. எங்களது போராட்டம் தொடரும் என அறிவித்து போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இன்று காலை முதலே சென்னை மெரினாவை நோக்கி பொதுமக்களும் குடும்பம் குடும்பமாக வந்தவண்ணம் உள்ளனர். இதன் காரணமாக மெரினா முழுவதும் மக்கள் தலைகளாகவே காணப்படுகிறது.
சென்னை மெரினாவில் இன்று சுமார் 3 லட்சத்துக்கான இளைஞர்கள், பொதுமக்கள் 5-வது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இன்று சனிக்கிழமை கல்லூரி, பள்ளிகள், அரசு அலுவலகங்கள் விடுமுறையாதலால் காலை முதலே மாணவர்கள் மெரினாவை நோக்கி வருகின்றனர்.
அலைகடலே ஆர்ப்பரிப்பது போல மெரினாவில் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் ஆர்ப்பரித்து ஆரவாரமாக நடைபெற்று வருகிறது….