சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான வழக்குகளை ரத்து செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்த நிலையில், இன்று அதற்கான அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த கடந்த 2017ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, தமிழக இளைஞர்கள் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினார். சென்னை மெரினாவில் வரலாறு காணாத அளவில் ஜனவரி 16-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால், கடைசி நாளன்று நடைபெற்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையத்தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கு எதிரான தடை நீக்கப்பட்டது. இருப்பினும், போராட்டத்தின் போது தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது காவலர்களை தாக்கியது, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட வழக்குகள் தவிர பிற வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என அண்மையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி, தற்போது ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தொடரப்பட்ட 308 வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு சில வழக்குகளை தவிர பிற வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.