திருச்சி : திருச்சி மாவட்டம் சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அங்கு ஜல்லிக்கட்டு  ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டு உள்ளது.

 பொங்கலையொட்டி, தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி உள்ளது. புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,  திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே பெரிய சூரியூரிலும் இன்று போட்டி நடைபெற்று வருகிறது.

சூரியூரில் உள்ள நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று, பொங்கல் வைத்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதை இக்கிராம மக்கள் பராம்பரிய வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி,  ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு பெரிய சூரியூரில்  தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பார்வையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் மைதானத்துக்கு அருகில் வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் காளைகளால் ஆபத்து ஏற்படாத வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில்,  திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 800 ஜல்லிக்கட்டு காளைகள் பங்கேற்கின்றன. மொத்தம், 8 சுற்றுகளாக நடைபெறும் போட்டியில், 500 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிறந்த மாடுபிடி வீரருக்கு முதல் பரிசாக இருசக்கர வாகனம் (பைக்) ஒன்றும், இரண்டாவது பரிசாக எல்சிடி டிவியும் வழங்கப்பட உள்ளன. இதைத்தவிர, போட்டியில் பங்கேற்கும் காளைகள், காளையருக்கு எவர்சில்வர் பாத்திரங்கள், பீரோ, கட்டில், மேஜை, மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.

இந்த நிலையில்,  தமிழ்நாடு அரசு திருச்சி  சூரியூரில்  ஜல்லிக்கட்டு  ஸ்டேடியம் அமைப்பதற்கான அரசாணையை த வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையை சூரியூர் ஜல்லிக்கட்டு விழா குழுவினரிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் வழங்கினார்.