தமிழக சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு குறித்து புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாட்டு மாடு இனங்களைப் பாதுகாக்க ஜல்லிக்கட்டு உதவுமா எனும் கேள்வி எழுத்துள்ளது.

ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கூறும் இரண்டு காரணங்கள்:

  1. ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடை செய்துவிட்டால், உள்நாட்டு எருதுகளின் உரிமையாளர்கள் மனமுடைந்து, இனி உள்நாட்டு மாட்டுவகைகளைப் பாதுகாப்பதில் எந்த லாபமும் இல்லையென அதனை அடிமாட்டு விலைக்கு விற்றுவிடுவார்கள்.
  2. ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்துவதன் மூலம் மட்டுமே, அந்தப் போட்டியில் அடங்காத காளைகளை வலிமையான காளைகளாக அடையாளம் காண முடியும், அவற்றை இனப்பெருக்கத்திற்கு பயன்படுத்த முடியும்”.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் ரோஸ்லின் ஆராய்ச்சி நிறுவனத்தின் கூற்றுப்படி, அறிவியல் தரவுகளில் (1870 முதல் 1930 வரை), புலிக்குளம் பகுதியில் சல்லிக்கட்டு நடத்தப்பட்டதாகவும், அதில், சண்டை மற்றும் இனப்பெருக்கம் ஆகியவற்றிற்காகவே சில நாட்டு காளைகள் வளர்க்கப்பட்டதாகவும்” குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வகையான மாட்டு இனங்கள் ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுகின்றன என தற்போது அடையாளம் காண முடியவில்லை.

ஜல்லிக்கட்டு போன்ற ஒரு திறனற்ற முறைமூலம் இனப்பெருக்கத்திற்கான காளையை அடையாளம் காண்பது ஒரு பண்டைய நடைமுறை.

ஒரு இனப்பெருக்கத்திற்கான காளையை அடையாளம் காண ஜல்லிக்கட்டை விடச் சிறந்த முறைகள் இன்றைய அறிவியல் உலகத்தில் பின்பற்ற முடியும்., நமக்கு விருப்பமான பாரம்பரியப் பண்புகளைக் கொண்ட நாட்டு மாட்டின் வம்சாவளியை (தூய இனம் அல்லது கலப்பினம்) உறுதி செய்து கொள்வது, சந்ததி வேறுபாடுகள் தெரிந்துக்கொள்வது, இனப்பெருக்க ஆரோக்கியம் (பசுக்களைக் கர்ப்பமாக்கும் திறன்), மற்றும் விந்து பரிசோதனை ஆகிய முறைகளைப் பின்பற்றலாம். செயற்கை கருவூட்டல் முறை போன்ற மாற்றுமுறைகளையும் பின்பற்றலாம். ஒவ்வொரு காளையைப் பற்றிய விவரங்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டும். நல்ல காளைகளின் விந்து சேமிக்கப்பட வேண்டும்.

தனிப்பட்ட மாடுகள் மற்றும் அதன் இனப்பெருக்க திறமை மற்றும் சாதனைகள்குறித்த விவரங்கள் துல்லியமாகவும் நிரந்தர ஆவணமாகவும் காக்கப்பட வேண்டும், சந்தைகளில் விற்கப்படும் நாட்டு மாடுகள்குறித்த விவரங்களும் பதிவுசெய்யப்பட வேண்டும், அது அந்த மாட்டின் குடும்ப வரலாற்றைக் கண்டுபிடிக்க உதவும்.

இதனை எளிதாய் விளக்குவது என்றால், எப்படி மோட்டார் வாகனங்கள் வாங்கும் போதும் விற்கப்படும்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் “பதிவு” செய்யப்படுவது போல், மாடுகள்குறித்த விவரங்களும் ஒரு கால்நடை பதிவு அலுவலகம் கொண்டு ஆவணப்படுத்தப்பட வேண்டும்.

நாட்டு காளைகளின் மருத்துவ விவரங்கள், அதாவது காளைக்கு வழங்கப்பட்ட சுகாதார சிகிச்சைகள், இனப்பெருக்க உறுப்பின் நீளம், விதை அளவு, இனப்பெருக்கத் திறமை மற்றும் ஆரோக்கியம் மற்றும் மாட்டிற்கு நிரந்தர அடையாள எண் பதிவு செய்யப்பட வேண்டும். மின்னணு அடையாள அட்டைமூலம் ஒரு மாடு உயிருடன் இருக்கும்வரை எந்தக் கூட்டத்தில் இருந்தாலும் அடையாளம் காணப்படும்.

ஒவ்வொரு மாட்டின் இனப்பெருக்கம் குறித்த தகவல், மாட்டின் கருவுறுதல் திறமை மற்றும் அந்த மாட்டின் உடல்நலப் பிரச்சினைகள் அடையாளம் காண உதவும். இந்த தகவல்பதிவு ஒரு மாட்டு வகையின் பல தலைமுறைகுறித்த நம்பகத் தகுந்த வரலாற்றை அறிய உதவும்.

கால்நடை இனத்தின் வளர்ச்சிகுறித்த தரவுகள் இந்தியாவில் கடந்த காலத்தில் ஆவணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அறிவியல்பூர்வமாக காளை இனம்குறித்த தரவுகளை நிர்வகிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. உதாரணமாக, 1928ல், இந்திய விவசாயம் குறித்த லின்லித்ஹொவில் ஆணையம், பாளையம்கோட்டையைச் சேர்ந்த பட்டாகரரின் கவனமான இனபெருக்க

முயற்சியின் விளைவாய் காங்கேயம் காளையினம் தோன்றியதாய் தெரிவிக்கின்றது.
கால்நடைகளை மரபணுத் தரவு இப்போது பல நாடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் கால்நடை வளர்க்கும் விவசாயிகள் மற்றும் வணிக நிறுவனங்கள், பசு வைத்திருப்போர், இனப்பெருக்கம் செய்யும் ஆண் காளையைத் தேர்வு செய்ய முடியும். இந்தியாவிலும் அத்தகைய நிலை வருமா?