டெல்லி: மத்திய நீர் வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. பல அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மருத்துவர்கள், செலிவியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், காவலர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அமைச்சர்கள் அமித்ஷா உள்பட 5 பேர் தொற்று பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று குணமடைந்த நிலையில், 6வது அமைச்சராக கஜேந்திர சிங் சேகாவத் பாதிக்கப்பட்டு உள்ளார்.
தற்போது, 52 வயதான சேகாவத், உடல்நலம் பாதிப்பு காரணமாக, கொரோனா தொற்றுக்கான சோதனை மேற்கொண்டதில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மருத்துவர்களின் அறிவுறுத்தலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மத்திய ஜல்சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடந்த இரு நாட்களுக்கு முன்பு யமுனை நதி இணைப்பு தொடர்பாக அரியானா முதல்வர் எம்.எல் கட்டரை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.