மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போது மதுரை மாநகர் பாஜக தலைவருமான டாக்டர் சரவணன் நடித்த அகிலன் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன் வெளியானது.

மேலும், ‘சரித்திரம் பேசு’, ‘அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’ ஆகிய படங்களிலும் டாக்டர் சரவணன் நடித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்கீரின் சீன் நிறுவனம் தயாரிக்க, கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கு அகிலன் என பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து டாக்டர் சரவணன், “அகிலன் என்ற திரைப்படம் நான் நடித்து சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியானது. தற்போது அகிலன் 2 படத்தை தயாரிக்கும் பணி துவங்கி இருக்கிறது. படத்தின் தலைப்பை கில்டு அமைப்பிலும் பதிவு செய்துள்ளேன்.
இந்நிலையில், என் படத் தலைப்பை சூட்டியிருப்பது வருத்தமளிக்கிறது. அந்த படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஜெயம் ரவி ஆகியோர் படத்தின் பெயரை மாற்ற வேண்டும்” என தெரிவித்தார்.

இது குறித்து கில்டு தலைவர் ஜாகுவார் தங்கத்திடம் கேட்டோம். அவர், “ஜெயம் ரவி நடிக்கும் படத்துக்கான தலைப்பை எங்களது கில்டு அமைப்பில் பதிவு செய்யவில்லை. தயாரிப்பாளர் கவுன்சிலில் பதிவு செய்திருப்பார்கள்.
ஆனாலும் அங்கு படத்தலைப்பை பதிவு செய்யும்போது எங்களது கில்டு அமைப்பில் கேட்டுத்தான் ஒப்புதல் அளிப்பார்கள். அப்படி இருந்தும் இந்தத் தவறு எப்படி நடந்தது என தெரியவில்லை. விசாரிக்கிறோம்” என்றார்.