
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, லால் ஜோஸ், கலையரசன், ராசுக்குட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.
கொரோனா ஊரடங்கினால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. திரையரங்க வெளியீட்டுக்காகவே ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருந்தது. திடீரென்று ஜகமே தந்திரம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்று தகவல் பரவியது.
இது தொடர்பாகப் படக்குழுவினர் யாருமே எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் ஜகமே தந்திரம் வெளியீடு தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பதிவில் : திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், திரைப்பட ரசிகர்கள் மற்றும் பெரும்பாலான எனது ரசிகர்களைப் போல நானும் ஜகமே தந்திரம் திரையரங்கில் வெளியாகும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று தனுஷ் தெரிவித்திருந்தார்.
மீண்டும் படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது.
‘ஜகமே தந்திரம்’ படத்தை ஓடிடியில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சமயத்தில்தான் ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மற்றொரு படமான ‘ஏலே’ வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்களுடன் கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் ‘ஏலே’ படத்தை நேரடியாக விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குக் கொடுத்து ஆச்சரியத்தை அளித்தது. அதோடு மட்டுமன்றி, முன்னதாகப் பெரும் தொகை அளிக்க முன்வந்த ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்திடம் மீண்டும் பேசி ‘ஜகமே தந்திரம்’ படத்தின் நேரடி ஓடிடி வெளியீட்டை உறுதி செய்தது. இதனால் திரையரங்குகளில் ‘ஜகமே தந்திரம்’ வெளியாகாது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ‘ஜகமே தந்திரம்’ படத்தை இந்தியாவில் 6 மொழிகளில் வெளியிட ஃநெட்ப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் மூலமாக இந்தியாவில் தங்களுடைய ஓடிடியைப் பிரபலமாக்க ஃநெட்ப்ளிக்ஸ் முடிவு செய்துள்ளது.