சென்னை:
சிபிசிஐடி இயக்குனராக இருந்த ஜாபர் சேட் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுதுறைக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழகஅரசு பிறப்பித்துள்ளது.

தமிழக உளவுத்துறை முன்னாள் டிஜிபியாக இருந்தவர் ஜாபர் சேட். தி.மு.க. ஆட்சியின் போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து சட்ட விரோதமாக அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நில ஒதுக்கீடு செய்யப் பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அதிமுக ஆட்சி அவர் மீது கடந்த 2011-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது. அதைத்தொடர்ந்து பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி மீண்டும் பணி வழங்கப்பட்டது.  கடந்த ஆண்டு சென்னை உயர்நீதி மன்றமும் ஜாபர்சேட் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில், அவர் சிபிசிஐடி பிரிவு இயக்குனராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில்,  தற்போது,  அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுதுறை தலைராக இடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை கூடுதல் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார்.
சிபிசிஐடி இயக்குனர் பதவிக்க பிரதீப் வி.பிலிப்-ஐ  நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக அனுதாபியான ஜாபர்சேட் மீது அதிமுக அரசுக்கு நம்பிக்கையில்லாததால், அவர் பணி மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.