2017-ம் ஆண்டு அ.தி.மு.க. பிளவுப்பட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி. தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் போலீசார் டி.டி.வி.தினகரன், அவருடைய நண்பர் மல்லிகார்ஜுன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரை கைது செய்தனர். இதில் சுகேஷ் சந்திரசேகர் மட்டும் சிறையில் உள்ளார்.
இதையடுத்து டெல்லி அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகரின் வீடு, சென்னையை அடுத்த கானத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
2 கிலோ தங்கம், ரூ.82 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறி அவரது பங்களாவுக்கும் ‘சீல்’ வைத்தனர்.
மேலும் 200 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக சுகேஷ் மீது மற்றொரு வழக்குப்பதிவு செய்திருந்தனர். அந்த பண மோசடி வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார்.
இந்நிலையில், ஜாக்குலின் ஃபெர்னாண்டசிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கு மேலாக நீட்டித்து வரும் இந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகரின் பணமோசடி குறித்த பல்வேறு தகவல்களை நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.