மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க பல இயக்குனர்கள் பலமுறை முயற்சித்து தோல்வியுற்றனர் . இந்நிலையில் இயக்குநர் கெளதம் மேனன் சத்தமே இல்லாமல் படப்பிடிப்பு நடத்தி கொண்டிருக்கிறார்.
ஆனால், இதை திரைப்படமாக எடுக்காமல் வெப்சீரிஸாக ரம்யா கிருஷ்ணனை வைத்து எடுத்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது .
இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான ஜெ.தீபக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
”ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ’தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.
இந்த சூழலில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் ’குயின்’ என்பதை கௌதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்”.