சென்னை:
கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையொட்டி, திமுக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
திமுக மாவட்டச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த (ஜூன்) 2 ஆம் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று காலை 8.05 ஜெ.அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அன்பழகன் மறைந்த செய்தி கிடைத்தவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ரேலா மருத்துவ மனைக்குச் சென்றார். அவருடன் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முன்னணிப் பிரமுகர்களும் சென்றனர். அங்கு ஜெ. அன்பழகனுக்கு மருத்துவமனையிலேயே அஞ்சலி செலுத்திவிட்டுப் புறப்பட்டனர்.
இதையடுத்து, 3 நாட்களுக்கு கழக அமைப்புகள் அனைத்தும், கழக கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுமாறும், கழக நிகழ்ச்சிகள் அனைத்தையும் 3 நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.