அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ளார்.

புளோரிடா மாகாணம் பாம் பீச்சில் உள்ள அவருக்கு சொந்தமான மார்-ஏ-லாகோ ரிசார்ட்டில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

டொனால்ட் டிரம்ப் – இவான்கா டிரம்ப் (பழைய படம்)

இந்த அறிவிப்பின் போது அவரது மனைவி மெலனியா டிரம்ப் மற்றும் அவரது மகன்கள் எரிக் மற்றும் பரோன் தவிர அவரது அரசியல் ஆலோசகர்கள் மற்றும் நண்பர்கள் உடனிருந்தனர்.

2017 முதல் 2020 வரை டொனால்ட் டிரம்ப் அதிபராக இருந்த போது அவரது ஆலோசகராக இருந்த அவரது மகள் இவான்கா டிரம்ப் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை என்றபோதும் அவரது கணவர் ஜாரெட் குஷ்னர் இதில் கலந்துகொண்டார்.

இதுகுறித்து இவான்கா டிரம்ப் வெளியிட்டுள்ள செய்தியில் “எனது தந்தையை நான் மிகவும் நேசிக்கிறேன். மூன்றாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடும் அவர் வெற்றிபெற எனது வாழ்த்துகள்.

“எனது குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்பு எனக்கு உள்ளதால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. நான் தீவிர அரசியலில் ஈடுபட போவதில்லை” என்று கூறியுள்ளார்.

டிரம்ப் அதிபராக இருந்தபோது இரண்டு முறை பதவி நீக்க குற்றச்சாட்டை எதிர்கொண்டார், தவிர 2020 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டதும், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதை தவிர்க்க வன்முறையை கட்டவிழ்த்து விட்டதாகவும் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன இந்த நிலையில் 2024 ம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அறிவித்திருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.