கொல்கத்தா:

கொல்கத்தாவில் முக்கிய சாலை ஒன்றில், திடீரென  ரூ.2000, ரூ.500 நோட்டுக்கள் மழை போல கொட்டத் தொடங்கியதால், பொதுமக்கள் வியப்புடன் அந்த ரூபாய் நோட்டுக்களை பொறுக்கத் தொடங்கினர்.

விசாரணையில், அருகே உள்ள நிறுவனத்தில் திடீர் ரெய்டு நடைபெற்ற நிலையில்,  கணக்கில் வராமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்கள் ரோட்டில் வீசப்பட்டது தெரிய வந்துள்ளது.

கொல்கத்தாவில் உள்ள பென்டின்க் தெருவில் உள்ள ஒரு அலுவலக கட்டித்தில், வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதைக்கண்ட அந்த நிறுவன அதிகாரிகள், தங்களிடம் இருந்த கணக்கில் வராத ரூபாய் நோட்டுக்களை நிறுவனத்தின் ஜன்னல் வழியாக தூக்கி எறிந்துள்ளனர். இதனால் சாலையில் பணமழை கொட்டியது.

இதைக்கண்ட பொதுமக்கள் அந்த பணத்தை பொறுக்கி எடுத்தனர். இதுகுறித்துதகவல் அறிந்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து பணத்தை மீட்ட நிலையில், விசாரணை நடத்தினார்.

விசாரணையில், கட்டிடத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, நிறுவனத்தைச் சேர்ந்தவர்களே ரூபாய் நோட்டுக்களை சாலையில் வீசியது தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார்,  ரூ .3.7 லட்சத்தை மீட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து கூறிய பக்கத்துஅலுவலகத்தை சேர்ந்த நபர் ஒருவர்,   மேலே இருந்து பணமழை கொட்டியதை பார்க்கும்போது, பணமழை பெய்கிறதோ என்ன எண்ணத் தோன்றியதாகவும், இந்த அதிசயத்தை கண்டு திகைத்ததாகவும், காற்றில் ரூ .2,000 மற்றும் ரூ .500 நாணயத்தாள்கள் மிதப்பதைக் கண்டு வியப்படைந்தேன் என்று தெரிவித்து உள்ளார்.