டில்லி

அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும் போது அமைதி காப்பது பாவமாகும் என காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் நேற்று முன் தினம் 75 ஆம் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.   இதையொட்டி பல அரசியல் தலைவர்கள் நாட்டுக்கு வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.  காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஒரு செய்தி ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கட்டுரையில் சோனியா காந்தி, “நமது நாட்டில் ஊடக சுதந்திரம் மறுக்கப்படுகிறது. அனைத்து எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் இல்லை.   நாடாளுமன்றத்தில் பேச உறுப்பினர்களுக்குச் சுதந்திரம் இல்லை. மக்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஜி.எஸ்.டி., போன்றவை குறித்து கருத்து தெரிவிக்க உரிமைகள் மறுக்கப்படுகின்றன.மாநில அரசுகளால்  தங்கள் உரிமைகளைக் கேட்டுப் பெற முடியவில்லை.

இத்தகைய நிலையில் இது சுதந்திரம் என்றால் என்ன என்பது குறித்து மக்கள் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரம் ஆகும்   நமது ஜனநாயகம் பழுது பார்க்கப்பட வேண்டும். ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் சரி செய்யப்பட வேண்டும். நாம் பல ஆண்டுகளாக அரும்பாடுபட்டு உருவாக்கிய வளர்ச்சிகள், வெற்று வாக்குறுதிகள், வீண் விளம்பரங்களால், மீண்டும் பழைய நிலையை எட்டி உள்ளது.

நமது அரசியலமைப்பு சட்டம் உருவாக்கித் தந்துள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு காலில் போட்டு மிதிக்கப்படும் போது, நாம் அமைதியாக இருப்பது மிகப் பெரிய பாவம் ஆகும்.  நமது ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்வோம் என, 75வது சுதந்திர தினத்தில் உறுதி ஏற்போம்.”என தெரிவித்துள்ளார்.