இந்திய மீனவர்களை சுட்டுக்கொனஅறதாக கைது செய்யப்பட்டு இந்தியசிறையில் இருக்கும் இத்தாலியக் கடற்படை வீரரை விடுவித்து அவரது நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. நடுவர் நீதிமன்றம் இந்தியாவுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனை இத்தாலி வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி என்ரிகா லெக்சி என்ற இத்தாலி நாட்டு சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாவலர்கள், கேரள கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஜெலஸ்டைன், அஜீஸ் பிங்கு என்ற 2 இந்திய மீனவர்களை அம்பலப்புழா கடல் பகுதியில் சுட்டுக்கொன்றதாக புகார் எழுந்தது. மீனவர்களை கடற்கொள்ளையர்கள் என்று தாங்கள் கருதியதாக இத்தாலி பாதுகாப்பு படையினர் கூறினர்.
2012, பிப்ரவரி 19-ம் தேதியன்று கேரள போலீஸ் இத்தாலிய கடற்படை வீரர்களை கைது செய்தனர். கேப்டன் உம்பர்த்தோ வைடெல்லியிடமும் விசாரணை நடத்தினர். பிறகு இருவரும் 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
துப்பாக்கிச் சூடு நடந்த போது சர்வதேச கடல் பகுதியில்தான் இத்தாலிய டேங்கர் கப்பல் இருந்தது என்றும் எனவே இந்தியா இவர்களைக் கைது செய்ய முடியாது என்றும் இத்தாலி அரசு கூறியது. இதனையடுத்து இருநாட்டு வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையே அமைச்சர்கள்மட்ட ஆலோசனைகள் நடைபெற்றது ஆனால் எந்தவித தீர்வு ஏற்படவில்லை.
மார்ச் 1, 2012-ல் கடற்படை வீரர்களுக்கு எதிராக தங்கள் நாட்டிலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அதன் படி 21 ஆண்டுகளுக்குக் குறையாத சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் இத்தாலி அரசு இந்தியாவுக்கு தகவல் அனுப்பியது.
மார்ச் 7, 2012-ல் இத்தாலி பிரதமர் மரியோ மோண்ட்டி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கை அழைத்து நடந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்தார்.
ஆனாலும் தீர்வு ஏற்படவில்லை. இந்த நிலையில், மே 30-ம் தேதி கேரள உயர் நீதிமன்றம் இத்தாலி கடற்படையினருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்தது. அதாவது ரூ.1 கோடி பிணை மற்றும் கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலிருந்து 10 கிமீ சுற்றுப்பரப்பில் இருவரும் இருப்பது அவசியம் என்றும் நிபந்தனைகளை விதித்தது உயர் நீதிமன்றம்.
டிசம்பர் 21, 2012-ல் இருவரது பாஸ்போர்ட்டும் விடுவிக்கப்பட்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு இருவரும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனவரி 4, 2013-ல் இருவரும் கேரளா திரும்பினர்.
மீண்டும் பிப்ரவரி 22, 2013-ல் கடற்படை வீரர்கள் இருவரும் இத்தாலி தேர்தலில் வாக்களிக்க இத்தாலி செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது.
ஆனால் மார்ச் 11-ல் இத்தாலி அரசு இருவரையும் இந்தியா அனுப்ப மறுத்தது. இந்நிலையில் இருநாடுகளுக்கான உறவில் கடும் விரிசல் ஏற்பட, மார்ச் 14, 2013-ல் சர்வதேச தீர்ப்பாயத்தை நாட போதிய அடிப்படைகள் இருப்பதாக இத்தாலி அரசு தெரிவித்தது.
இதனையடுத்து இந்திய உச்ச நீதிமன்றம் இத்தாலியின் செயலைக் கண்டித்ததோடு, இந்தியாவுக்கான இத்தாலிய தூதர் டேனியல் மன்சினியை நாட்டை விட்டுச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.
மார்ச் 18,2013-ல் வியன்னா ஒப்பந்தத்தின் படி இந்தியா தன்னை இந்த வழக்கில் சேர்க்க முடியாது என்று இத்தாலி தூதர் மன்சினி கோரினார், ஆனால் இதனை ஏற்காத உச்ச நீதிமன்றம் இருவரையும் இத்தாலிக்கு அனுப்ப மனுதாரராக செயல்பட்ட தூதர் பொறுப்பேற்க வேண்டும் அவர், எந்தவித பாதுகாப்பையும் கோர முடியாது என்று தெரிவித்தது.
இதனையடுத்து மார்ச் 21, 2013-ல் கடற்படையினரை இந்தியாவுக்கு அனுப்ப இத்தாலி அரசு ஒப்புக் கொண்டது. இதனையடுத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்கவே, ஜூலை 26, 2015-ல் சர்வதேச கடல்சார விவகார தீர்ப்பாயத்தை இத்தாலி அணுகியது.
அதன் பிறகு ஆகஸ்ட் 26, 2015-ல் கடற்படையினருக்கான விசாரணைகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் உடல் நலத்தைக் காரணம் காட்டி 2014-ம் ஆண்டு இத்தாலிக்கு அனுப்பப்பட்ட மஸிமிலியானோ லட்டோர் என்ற கடற்படை வீரர் இந்தியாவுக்கு திரும்ப முடியாது என்று இத்தாலி அறிவித்தது.
இந்நிலையில் தற்போது தி ஹேக் – இல் செயல்படும் ஐநா. மத்தியஸ்த நீதிமன்றம் இங்கு இந்திய அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மற்றொரு கடற்படை வீரரான கிரோனையும் விடுவித்து அவரது நாட்டுக்கு அனுப்பும்படி உத்தரவிட்டுள்ளது.
இதை இன்று இத்தாலிய வெளியுறவு அதிகாரி தெரிவித்தார். மேலும் அவர், “உடனடியாக இந்திய அரசை தொடர்புகொண்டு, கடற்படை வீரரை இத்தாலிக்கு அழைத்துவருவோம்” என்று தெரிவித்தார்.