புனே

ந்தியாவில் உள்ள  அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட இன்னும் 3 ஆண்டுகள் ஆகும் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

நாடெங்கும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவை தடுக்க தடுப்பூசிகளால் மட்டுமே முடியும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது,  இதையொட்டி இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.   சமீபத்திய மூன்றாம் கட்ட தடுப்பூசி பணியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 18-44 வயதுடையோருக்குத் தேவையான தடுப்பூசி மருந்துகளை மாநில அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அர்சு அறிவுறுத்தி உள்ளது.  தற்போது கொரோனா தொற்றின்  இரண்டாம் அலை பாதிப்பு கடுமையாக உள்ளது.  இதையொட்டி தடுப்பூசி மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

இதில் கோவாக்சின் தடுப்பூசி பாரத பயோடெக் நிறுவனம் கண்டறிந்து அதே நிறுவனம் உற்பத்தி செய்கிறது.  கோவிஷீல்ட் தடுப்பூசியை ஆஸ்டிரா ஜெனிகா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி உள்ளது.  இதை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் வெளிநாட்டிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்து உற்பத்தி செய்கிறது.

இந்த மூலப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்ப அமெரிக்கா தங்கள் தேவையைக் கருதி தடை விதித்து இருந்தது.  தற்போது இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க தடைகள் சற்றே தளர்த்தப்பட்டுள்ளன.   ஆயினும் கொரோனா தடுப்பூசி அதிக அளவில் தேவைப் படுவதால் சீரம் இன்ஸ்டிடியூட் போதுமான அளவு தடுப்பூசி உற்பத்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சீரம் இன்ஸ்டிடியூட் இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் “இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் இதுவரை 20 கோடி தடுப்பூசி டோஸ்கள் விநியோகம் செய்துள்ளது.  அதிக அளவில் மக்கள் தொகை உள்ள இந்தியாவில் 2 அல்லது 3 மாதங்களில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது சாத்தியம் இல்லை.  அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க 2 முதல் 3 ஆண்டுகள் வரை ஆகும்.” என அறிவித்துள்ளது.