புதுடெல்லி: பிற நாடுகளைப் போன்றே, இந்தியாவிலும் ஊரடங்கு காலத்திய அரசு ஆதரவை எதிர்பார்ப்பது சரியல்ல, அது செலவு கூடுதலான ஒன்று என்றுள்ளார் மோடி அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன்.
திட்டமிடப்படாத ஊரடங்கு நடவடிக்கையாலும், மத்திய அரசின் செயலற்றப் போக்கினாலும், இந்தியப் பொருளாதாரம் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதாரம் குறித்து பேசிய மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன், “ஒரு ஊக்கத் தொகுப்பை விரைவில் எதிர்பார்க்கலாம். மற்ற நாடுகள் வழங்கியதைப் போன்றே வழங்கினால் செலவு அதிகமாக இருக்கும். பொருளாதாரத்தில் எவரும் கற்றுக்கொள்ளும் முதல் விஷயம் யாருக்கும் இலவச உணவு கிடையாது என்பதுதான்.
மற்ற நாடுகளின் ஊக்கத் தொகுப்புகளுடன் ஒப்பிடுவது தவறானது. டாலர் உலகளாவிய இருப்பில் உள்ள பணம் என்பதால் மிகப்பெரிய ஊக்க நடவடிக்கைகளை வழங்கும் திறன் அமெரிக்காவிற்கு உள்ளது” என்றார்.
ஊரடங்கு மீண்டும் மே 17 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதால் நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் சுருங்கும் என நிபுணர்கள் பலர் கணித்துள்ளனர். முதல் காலாண்டில் சரிவு ஏற்படும் என ஒத்துக்கொண்ட கே.வி.சுப்ரமணியன், இரண்டாம் பாதியில் பொருளாதாரம் மீண்டெழும் என்று கூறியுள்ளார்.
“நாம் படிப்படியாக ஊரடங்கை திறப்பதால் இரண்டாம் காலாண்டு சிறப்பாக இருக்கும், மூன்று மற்றும் நான்காம் காலாண்டில் பொருளாதாரம் வேகமெடுக்கும், ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் 2% வளர்ச்சியுடன் முடிவடையும்” என்றார்.