நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் பேசிய குஷ்பு, நான் திமுகவில் இருந்தபோது, ‘என் வீட்டில் கல் வீசச் சொன்னது ஸ்டாலின்’தான் என்று நேரடியாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை குஷ்பு, அவ்வப்போது ஆட்சியாளர்களை விமர்சித்து வருவார். அதுபோல, தான் இடம்பெற்றிருக்கும் கட்சியையும் விமர்சிப்பதில் தயக்கம் காட்ட மாட்டார். முதலில் திமுகவில் சேர்ந்த குஷ்பு, பின்னர் அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை தன்னை மதிக்கவில்லை என்று கூறி, சமீபத்தில் பாஜகவில் இணைந்தார். அப்போது, காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று கடுமையாக விமர்சித்தார். அதைத் தொடர்ந்து பாஜக கூட்டங்களில் திமுகவையும், காங்கிரசையும் தொடர்ந்து விமரிசித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் திமுகவில் இருந்து விலகியது ஏன் என்பது குறித்து குஷ்பு முதன்முறையாக வாய் திறந்துள்ளார். திமுகவில் இருந்து விலகி 7 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது நேரடியாக குற்றம் சாட்டி பேசியுள்ளார்.
முன்னதாக குஷ்பு திமுகவில் இருந்தபோது, திருச்சியில் கலைஞர் கருணாநிதி தலைமையில் திருச்சி சிவா மகள் திருமணம் நடைபெற்றது. அதில் குஷ்புவும் கலந்துகொண்டு, மதியம் திருச்சி ஃபெமினா ஹோட்டலுக்கு வந்தார். அப்போது திமுக கரை வேட்டி கட்டிய சுமார் 50 பேரும், மகளிர் அணியினர் சிலரும் குஷ்புவை நோக்கி செருப்புகளையும், கற்களையும் வீசித் தாக்கினர்.அதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அவரது வீட்டின் மீது திமுகவினர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து, அவரது குழந்தைகள் அனந்திகாவும், அவந்திகாவும் பதற்றமான குரலில், ‘அம்மா வீட்டுல கல் எறியுறாங்க. பயமா இருக்கு’ என கதறினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு காரணம், ‘அடுத்த தலைவர் ஸ்டாலின் இல்லை’ என குஷ்பு வார இதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்ததாக கூறப்பட்டது. அவரது பேட்டியில், ‘திமுக ஜனநாயகக் கட்சி. இங்கு அடுத்த தலைவராக ஸ்டாலின் தான் வரவேண்டும் என்பதில்லை. கட்சியின் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்’ என 2013 பிப்ரவரியில் ஒரு வார இதழில் பேட்டி கொடுத்திருந்தார். அதனால் கோபமடைந்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் கல்வீச்சு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில்தான் தன் வீட்டில் கல்வீசியது யார், வீசச்சொன்னது யார் என்பது குறித்து குஷ்பு ஓப்பனாக பேசியிருக்கிறார். அருமனையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசியவர், தீபாவளி, பொங்கல் எல்லாம் குடும்பத்தோட கொண்டாடுவோம். மதம் பெருசு கிடையாது, ஆனா ஒரு மதத்துக்கு எதிரா நீங்க செய்யுறதுதான் தவறு. நான் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவதான். ஆனா பொட்டு வைக்கிறதுல நான் ரொம்ப பெருமைபடுறேன். என் பேருக்கு பின்னால கணவர் பெயர் போடுறதுல எனக்கு பெருமை. ‘சுந்தர்’ன்னா அழகுன்னு அர்த்தம்.
திருமாவளவன் இந்து மதத்துக்கு எதிரா பேசுறார். நான் இந்த மேடையில் திருமாவளவனுக்கு ஒரு சவால் விடுறேன். இந்து மதத்துக்கு எதிரா இவ்வளவு பேசுறீங்களே… உங்களுக்கு தைரியம் இருந்தால் இஸ்லாமிய மதத்துக்கு எதிரா ஒரு குரல் கொடுத்து பாருங்க. இந்து மதத்த சார்ந்தவங்க இழிச்சவாயங்கன்னு நினைச்சுகிட்டிருக்கீங்களா? என்றவர்,
தி.மு.க ஆட்சியில பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததுன்னு சொல்லிக்கிறாங்க. மு.க ஸ்டாலினுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். இதே தி.மு.க-வில நான் இருக்கும்போது திருச்சியில ஒரு நிகழ்ச்சிக்காக போயிருந்தேன். எட்டு வயது, பத்து வயது ரெண்டு பெண் குழந்தைகளை தனியா விட்டுட்டு போனேன். என் கணவர் ஐதராபாத்தில இருந்தார். காலையில திருச்சிபோயிட்டு மாலையில சென்னை போயிடுவேன்னு நம்பி போனேன்.
நான் திருச்சியில இருக்கும்போது என் விட்டுல கல்லெறிஞ்சாங்க. ‘அம்மா பயமா இருக்கு’ன்னு பசங்க போன் பண்ணி கதறினாங்க. ஒரு தாய்ங்கிற முறையில பதறிப்போய் ஸ்டாலின பார்க்கப்போனேன். ‘ஐயா சாப்பிட்டுட்டு இருக்காங்க. இப்ப பார்க்க முடியாது’ன்னு சொன்னாங்க.
‘உங்க கட்சித் தொண்டர் வீட்டுல கல் வீசுறாங்க, வீட்டுல ரெண்டு பசங்க இருக்காங்க, எனக்கு பயமா இருக்கு’ன்னு கதறி அழுதிட்டு இருக்கேன் நான். ஸ்டாலின் பார்க்கவே இல்ல. அப்பத்தான் வீட்டுல கல் வீசச் சொன்னதே ஸ்டாலின்தான்னு எனக்கு தெரிஞ்சது.
அப்படிப்பட்ட நிலையில அங்க இருந்து தள்ளப்பட்டவ நானு. இன்னைக்கு நான் பா.ஜ.க-வுல வந்ததால பாதுகாப்பா இருக்கிறேன். ஒரு பெண்ணுங்கிற முறையில், பெண் குழந்தையின் தாய் என்ற முறையில், நாட்டில் உள்ள பெண்களுக்கு பா.ஜ.க பாதுகாப்பு கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் இங்க வந்திருக்கேன் என்று அதிரடியாக கூறினார்.
குஷ்புவின் நேரடி தாக்குதல் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீப காலங்களில் குஷ்புவை சுய லாபத்துக்காக கட்சி மாறியதாக சமூக வலைதளங்களில் திமுக.வினர் டிரோல் செய்து வரும் நிலையில், திமுகவுக்கு பதில் கொடுக்கும் விதமாகவே குஷ்பு இ நேரடி அட்டாக்கை தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது.