டில்லி:

பாஜகவின் இடைக்கால பட்ஜெட், மக்களின் வாக்குகளை பெற  தயாரிக்கப்பட்ட உரையே என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடுமையாக சாடி உள்ளார்.

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மோடி அரசின் கடைசி இடைக்கால பட்ஜெட் நேற்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் பியூஸ் கோயல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களை குறித்து பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

பாஜக அரசுக்கு நாடு முழுவதும் மக்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இன்னும் ஓரிரு  மாதங்கள் மட்டுமே ஆட்சி இருக்கும் வேளையில், நடைமுறைப்படுத்த முடியாத பல அறிவிப்புகளை நிதி அமைச்சர் வெளியிட்டு உள்ளார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில்,  இடைக்கால நிதிநிலை அறிக்கை, தேர்தல் பிரச்சார ஒத்திகை என முன்னாள் நிதியமைச்சர் பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்!

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் நீண்ட அறிக்கை வெளியிட்டுள்ள சிதம்பரம், பாஜக அரசு  தாக்கல் செய்துள்ள  நிதிநிலை அறிக்கை வரும் தேர்தலுக்கான ஒத்திகை போன்று இருந்தது என்றும்,  நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பியூஷ் கோயல் உரையாற்றியது தேர்தல் பிரச்சாரம் போல் இருந்தது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு, வாக்குகளை பெறுவதற்காகவே இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நாட்டின் வளங்களைப் பெற ஏழைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்ற காங்கிரஸின் கொள்கைகளை அப்படியே வாசித்திருக்கும் நிதிஅமைச்சர் பியூஷிற்கு நன்றி என்றும் , மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்திலேயே பட்ஜெட் உரை தயாரிக்கப்பட்டு இருப்பதாக விமர்சித்துள்ளார்.