சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளுக்கு தேவையான பருப்பு பாமாயில் உள்பட உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் சென்னை நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர். வரிமுறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின்பேரில் இந்த ரெய்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தண்டையார்பேட்டையில் உள்ள காமாட்சி அண்ட் கோ உள்ளிட்ட பாமாயில், பருப்பு சார்ந்த தொழிற்சாலைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. பொது விநியோகத் திட்டத்துக்கு சப்ளை செய்யும் 2 குழுமங்களுக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் மற்றும் உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களான அருணாச்சலம் இம்பேக்ஸ் என்கிற நிறுவனத்தின் சென்னை மண்ணடி அலுவலகத்தில் சோதனை நடந்து வருகிறது. மேலும் தண்டையார்பேட்டையில் உள்ள  காமாட்சி குரூப் ஆஃப் கம்பெனிஸ், இன்டெர் கிரேடட் சர்வீஸ் குரூப் ஆகிய நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிறுவனங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என மொத்தம்  40 இடங்களில் இந்த சோதனைகள் நடந்து வருவதால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.

ஏற்கனவே இதுபோன்று கடந்த 2018ம் ஆண்டு தமிழக அரசுக்கு சத்துமாவு, முட்டை, பருப்பு வழங்கும், கிறிஸ்டி பிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற ஒப்பந்த நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 4 நாட்கள் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் ரூ. 17கோடி பணம் மற்றும் 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் , அந்நிறுவனத்திடம் இருந்து அபராதம் வசூலித்து விட்டு, அவர்களை விடுத்தனர். அந்நிறுவனம் தற்போதுவரை மீண்டும் தமிழகஅரசின் சத்துணவு திட்டத்துக்கு உணவுப்பொருட்களை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.