சென்னை: வரி முறைகேடு மற்றும் மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு தொடர்பாக, வருமான வரித்துறை சென்னை உள்பட 40 இடங்களில் நேற்று முதல் ரெய்டு நடத்தி வருகிறது. இந்த ரெய்டு இன்று 2வது நாளாகவும் தொடர்கிறது. வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் சென்னை, செங்கல்பட்டு, சேலம், தூத்துக்குடி உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் மத்தியஅரசின் அமைப்புகளான அமலாக்கத்துறை, என்ஐஏ, வருமான வரித்துறையினர் அடுத்தடுத்து சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக அவ்வப்போது என்ஐஏ அதிகாரிகள் சென்னை கோவை உள்பட மாநிலம் முழுவதும் சோதனைகளை நடத்தி பலரை கைது செய்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் தன் பங்குக்கு அவ்வப்போது சோதனைகளை நடத்தி வருகிறது. திமுக அமைச்சர்களின் இல்லங்களில் சோதனைகள் நடத்திய நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு முன்பாக சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் வீட்டுகள் மற்றும் மணல் குவாரிகள், மணல் காண்டிராக்டர்கள் வீடுகள், அரசு அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து நேற்று (செப்டம்பர் 20ந்தேதி) முதல் வருமான வரித்துறையினர் களம் இறங்கி உள்ளனர். வரி ஏய்ப்பு புகார்களின் அடிப்படையில் முக்கிய தொழில் அதிபர்கள், மேட்டூர், தூத்துக்குடி அனல்மின் நிலையம் உள்பட பல நிறுவனங்கள், அதிகாரிகளின் வீடுகள் என சுமார் 40 இடங்கடிளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகள் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி இயந்திரங்கள், பராமரிப்பு பணி மற்றும் கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பணிகளை சென்னையில் உள்ள ராதா இன்ஜினியரிங் கம்பெனி மேற்கொண்டு வருகிறது. , இந்த நிறுவனம் மீது வரி ஏய்ப்புகள் செய்ததாகவும், முறைகேடாக பணியாளர்களின் பணத்தை எடுத்ததாகவும் வருமான வரித்துறைக்கு பல புகார்கள் வந்ததால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு மின்வாரியத்துக்கு கருவிகள் வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக கூறி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் காசியில் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காசியின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்றுமுதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின்கீழ் (டான்ஜெட்கோ) எண்ணூர், அத்திப்பட்டு புதுநகர் (வடசென்னை), தூத்துக்குடி, மேட்டூர் ஆகிய 4 இடங்களில் நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்திசெய்யும் அனல்மின் நிலையங்கள் உள்ளன. கப்பல், லாரி, ரயில்களில் வந்திறங்கும் நிலக்கரியை எடுத்துச்செல்ல இங்கு பெரிய கன்வேயர்பெல்ட்கள், பல்வேறு மின்சாதனபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த கருவிகளை 4 தனியார் நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன. இதில் அதிக அளவில் முறைகேடு, வரிஏய்ப்பு நடந்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட 4 நிறுவனங்களின் தலைமை அலுவலகம், இயக்குநர்களின் வீடுகள்,மின்வாரியத்துக்கு பொருட்களை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர்களின் அலுவலகங்கள், வீடுகள், அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித் துறையினர் நேற்றுமுதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனம், சென்னையை மையமாக கொண்டு செயல்படும் வடமாநில நிறுவனம், இன்டர்ஃபேஸ் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களில் அடுத்தடுத்து சோதனை நடைபெற்றது. சென்னை புரசைவாக்கம் பிரிக்ளின் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் மகேந்திர ஜெயின், மற்றும் சென்னை தியாகராய நகர், கிண்டி, ஈக்காட்டுதாங்கல், எம்ஜிஆர் நகர், ஜாபர்கான்பேட்டை, நீலாங்கரை, எண்ணூர், நாவலூர், எருக்கஞ்சேரி, துரைப்பாக்கம், பொன்னேரி, செங்கல்பட்டு என தமிழகம் முழுவதும் 40 இடங்களில் 250-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரே நேரத்தில் இந்த சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இன்று 2வது நாளாக தொடர்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வெள்ளிவாயல்சாவடியில் உள்ள சென்னை ராதா இன்ஜினீயரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. இந்த நிறுவனம் மேற்கொண்ட பணிகள் தொடர்பாக தூத்துக்குடி அனல்மின் நிலையம், வஉசி துறைமுகத்தில் உள்ள கரித்தளத்திலும் சோதனை நடத்தப்பட்டது. அங்கு கன்வேயர் பெல்ட் கட்டுமானம், பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள சிறிய ஒப்பந்ததாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 850-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. அந்த நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டது.
எண்ணூர், வடசென்னை (அத்திப்பட்டு புதுநகர்), மேட்டூர், தூத்துக்குடியில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்று, கொள்முதல் செய்யப்பட்டு பயன்பாட்டில் உள்ள பொருட்கள் தரமானதாக உள்ளதா, அவற்றின் விலை, நிதிகணக்குகள் குறித்து விசாரணை நடத்தினர். அனல்மின் நிலையவளாகங்களில் உள்ள சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அலுவலகங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் கேட்டறிந்துள்ளனர். அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கோப்புகளை கைப்பற்றி விசாரித்தனர். இந்த சோதனையில், போலி ரசீதுகள் தயாரித்து வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள், ரசீதுகள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சோதனைகள் முடிந்த பிறகு, வரி ஏய்ப்பு மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும், அதுவரை எந்த தகவலையும் வெளியிட முடியாது’ வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.