புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வரும் சீக்கிய யாத்ரிகர்களிடம் ரூ.1400 நுழைவுக்கட்டணமாக வசூலிப்பது என்ற பாகிஸ்தானின் முடிவால், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே, கர்தார்பூர் சாலைத் திட்டம் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாவது தள்ளிப்போகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பஞ்சாப் எல்லையை ஒட்டி, பாகிஸ்தானுக்குள் அமைந்திருக்கும் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் நினைவிடம் அமைந்த கர்தார்பூருக்கு, பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூரிலிருந்து சுமார் 4 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்கப்பட்டது. இதற்கு இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த சாலை விரைவில் திறந்துவிடப்பட உள்ளது. இதனையடுத்து, இருநாடுகளுக்குமிடைய ஒப்பந்தம் கையெழுத்தாவதாக இருந்தது. ஆனால், பாகிஸ்தான் தரப்பில், பாகிஸ்தானுக்குள் நுழையும் ஒவ்வொரு இந்திய யாத்ரிகரிடமும் 20 டாலர் வரையிலான நுழைவுக் கட்டணம் வசூலிக்க பாகிஸ்தான் தரப்பில் முடிவு செய்யப்பட்டது.

இதற்கு இந்திய அரசு மற்றும் சீக்கிய பக்தர்கள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே, இதுதொடர்பான இழுபறி நிலவி வருவதால், எதிர்பார்த்தபடி, சாலை தொடர்பான ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகாது என்றே தொடர்புடைய தகவல்கள் கூறுகின்றன.