சென்னை: அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியன் எதிரொலியாக, முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அண்ணா பல்கலை துணைவேந்தர் கல்வி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மைதான் என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 433 பொறியியல் கல்லூரிகளில் 224 கல்லூரிகளில் 353 பேராசிரியர்கள் ஒரே நேரத்தில் பல கல்லூரிகளில் முழுநேர பேராசிரியர்களாக போலியாக பணிபுரிவதாக அறப்போர் இயக்கம் அண்ணா பல்கலைக்கழகம் மீது குற்றம்சாட்டியது. மேலும் இதற்கு அனுமதி வழங்கி அதிகாரிகளை விசாரிக்க வேண்டும் என்று கூறியதுடன் அதற்கான ஆவணங்களை வெளியிட்டதுடன், இதுதொடர்பாக முதலமைச்சர், கவர்னர், மத்திய கல்வித்துறை என பல தரப்புக்கும் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மீதும், கல்வி நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும், அண்ணா பல்கலையில் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் முறைகேடாக பேராசிரியர்கள் பணியாற்றியது உண்மை தான் என குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டவர், 52,500 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையில் 50,500 பேர் பணியாற்றுகின்றனர். மீதம் உள்ள 2 ஆயிரம் இடங்களில் 189 ஆசிரியர்கள் முறைகேடாக பணியாற்றுகின்றனர் என்றார்.
இவ்வாறு முறைகேடாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தவர், ஆதார் எண்களில் மாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. ஆதார் எண்களில் மாற்றம் செய்து ஒரே நபர் 32 கல்லூரிகளில் கண்டறியப்பட்ட உள்ளது. பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் விவரங்களை கண்டறிய நேற்றே குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.