மும்பை: டெஸ்ட் போட்டிகளுக்கென்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து மாடலில், 5 டெஸ்ட் மையங்களை இந்தியாவில் தேர்வுசெய்ய வேண்டிய நேரம் தற்போது வந்துள்ளது என்றும், பிசிசிஐ அதுகுறித்து முடிவுசெய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி.

ஆஸ்திரேலியாவில் பெரிய அணிகள் சுற்றுப்பயணம் செய்யும்போது, மெல்போர்ன், சிட்னி, பெர்த், பிரிஸ்பேன் மற்றும் அடிலெய்டு ஆகிய 5 மைதானங்கள் மட்டுமே டெஸ்ட் போட்டிகள் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

இங்கிலாந்தை எடுத்துக்கொண்டால், அங்கே வெளிநாட்டு அணிகள் சுற்றுப்பயணம் செய்கையில், லார்ட்ஸ், ஓவல், டிரென்ட்பிரிட்ஜ், ஓல்டு டிராஃபோர்டு, எட்ஜ்பாஸ்டன், செளதாம்ப்டன் மற்றும் ஹெடிங்லே ஆகிய 7 மைதானங்கள்தான் நிலையாக பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, இதுபோன்றதொரு நிலையான ஏற்பாடு இந்தியாவிலும் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது என்று கூறியுள்ளார் விராத் கோலி.

அவர் மேலும் கூறியதாவது, “இந்தியாவில் பல மாநில கிரிக்கெட் சங்கங்கள் இருக்கின்றன மற்றும் அவர்களுக்கான பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டுமென்பது உண்மைதான். ஆனால், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளின் விஷயத்தில் அதை நாம் நடைமுறைப்படுத்திக்கொள்ளலாம். டெஸ்ட் போட்டிகளில் அது ஒத்துவராது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யக்கூடிய ஒரு வெளிநாட்டு அணி தாங்கள் இத்தகைய மைதானத்தில்தான் விளையாடப் போகிறோம் என்பதை அறிந்துகொள்வது முக்கியம்” என்றார்.